Saturday, September 5, 2009

மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கிராம வீடுகள் தகர்ப்பு


பினாங்கு மாநிலத்தில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.

அங்குள்ள வீடுகளை தகர்க்கும் பணியை மேம்பாட்டு நிறுவனமான நூஸ்மெட்ரோ தொடங்கியது. வீடுகளை இடித்துத் தள்ளுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த தகர்ப்புக் குழுவினர் போலிசாரின் உதவியுடன் நேற்று அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர்

வீடுகளை இடிப்பதற்கு ஏற்கனவே சம்மதித்த சில குடியிருப்பாளர்களின் வீடுகளை ஊழியர்கள் இடிக்கத் தொடங்கினர்.

மூன்று வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் அப்பணியைத் தொடர விடாமல் தடுத்தனர். கிராம மக்களுக்கு ஆதரவாக மஇகா இளையர் பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் இறங்கினர். மஇகா ஆதரவாளர்களுடன் சேர்ந்து கிராம மக்கள், வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க முயன்றனர். தகர்ப்பு இயந்திரங்களையும் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

இதனால் குடியிருப்பாளர்களுக்கும் போலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக என்எஸ்டி தகவல் கூறியது. அப்போது நிகழ்ந்த சலசலப்பில் 4 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

கம்போங் புவா பாலா கிராமப் பிரச்சினை பல மாதங்களாக நீடிக்கிறது. அங்குள்ள குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் குடியிருப்பாளர்கள் அதற்கு மறுத்து வருகின்றனர்.

அந்த இடத்தை பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து விலைக்கு வாங்கிய மேம்பாட்டு நிறுவனம் அங்கு கண்டோமினிய வீடுகளைக் கட்டவுள்ளது. குடியிருப்பாளர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ள போதிலும் குடியிருப்பாளர்கள் அதற்கு இணங்கவில்லை. கிராம மக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் முடிவடைந்தது.

சூழல் மாசடைதலைத் தடுக்க செயற்கை மரங்கள்


பிரித்தானியாவில் நடந்த ஓர் மீளாய்வில், கரியமில வாயுவை காற்றிலிருந்து உறிஞ்சி உள்வாங்கிக்கொள்ளும் செயற்கை மரங்கள் என்ற புதிய கண்டுபிடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏனைய சில யோசனைகளைவிட செலவு குறைவானதாகவும் செயல்பாட்டுச் சாத்தியம் அதிகம் கொண்டதாகவும் இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது.

சூரிய ஒளியை திசை திருப்புவதற்கான பிரம்மாண்ட கண்ணாடிகளை விண்வெளியில் நிறுவுவது போன்ற யோசனைகளை யதார்த்தத்துக்கு ஒத்துவராதவை என்று கூறி பிரித்தானியாவின் இயந்திரப் பொறியியல் வல்லுநர்களின் அமைப்பு நிராகரித்துள்ளது.

ஆனால் இருபதாயிரம் டாலர்கள் செலவில் உருவாக்கப்படக்கூடிய இந்த செயற்கை மரம் ஒன்று, இருபது கார்கள் வெளியேற்றக்கூடிய அளவிலான கரியமிலவாயுவை காற்றுமண்டலத்தில் இருந்து அகற்றும் திறன் பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

Tuesday, August 25, 2009

ஆகஸ்ட் 25 கலிலியோவின் முதல் தொலைநோக்கி



கலீலியோ கலிலி (பெப்ரவரி 15, 1564 - ஜனவரி 8, 1642), அறிவியற் புரட்சியோடு நெருக்கமான தொடர்புடைய, ஓர் இத்தாலிய வானியலாளரும் மெய்யியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். "இயற்பியலின் தந்தை" என்ற வகையிலும், அறிவியலின் தந்தை என்ற வகையிலும், இவர் "நவீன வானியலின் தந்தை" எனக் குறிப்பிடப்படுகின்றார். (கெப்ளர் இப் பட்டத்துக்குக் கூடிய தகுதியுடயவர் என்றும் கருதப்படுகிறது.) இவருடைய பரிசோதனைகள், அறிவியல் சார்ந்த வழிமுறைகளை நிலைநிறுத்திய பேக்கனின் எழுத்துக்களுக்குத் துணையாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. பீசா நகரில் பிறந்த கலீலியோ கெப்ளரின் சமகாலத்தவராவார். கலீலியோவின் வேலைகள், குறிப்பாக அரிஸ்டாட்டிலின் வேலைகளிலிருந்து, குறிப்பிடத்தக்க திருப்பமாகும்.
கணிய அளவுப் பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளை கணித முறையில் பகுப்பாய்வு செய்வதையும் தொடக்கிவைத்தவர் என்றவகையில், அறிவியற் புரட்சியின் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு. அக்காலத்து மேற்கத்தைய சிந்தனையில், இத்தகைய வழிமுறை மரபு கிடையாது. இவருக்கு நேரடியாக முந்திய காலத்தவரான, பெரும் பரிசோதனையாளர், வில்லியம் கில்பர்ட் கணிய அளவு அணுகுமுறைகளைப் பயன்படுத்தவில்லை.
இவருடைய சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் இவர் வாட்டிக்கான் சிட்டியால் தண்டிக்கபட்டார்(கத்தோலிக்க மத குரு மாடம்)
இவர் தாம் மேம்படுத்திய தொலைநோக்கியைக் கொண்டு சூரிய மையக் கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார். கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.1609 -ஆகஸ்ட் 25 கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியைக் காட்சிப்படுத்தினார்.

Saturday, August 22, 2009

ஈராக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் இறப்பு


ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் நடுப்பகுதியில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 95 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 400 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாக்தாத்தில் இந்த ஆண்டில் நடந்த மிக மோசமான வன்செயல் இதுவேயாகும்.

ஒரு சில நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஆறு குண்டு வெடிப்புகள் ஈராக்கின் அரசு அமைச்சகங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே நடந்துள்ளது.
தலைநகரின் பாதுகாப்பு வலயமான கீரி்ன் சோன் என்ற பகுதிக்கு சற்று வெளியேயுள்ள வெளிநாட்டு அமைச்சகம் அருகேதான் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

பாதுகாப்புச் சூழல் குறித்து ஈராக்கிய அரசு சமீபத்தில் வெளியிட்டு வரும் நம்பிக்கை அறிக்கைகளை இது கேள்விக்குறியாக்குகிறது.இதற்கு முந்தைய தாக்குதல்கள் நகரின் வறுமை மிக்க, பாதுகாப்பு குறைவான பகுதிகளில் நடைபெற்றதாகவும், இந்த வகையில் தற்போது நடைபெற்ற தாக்குதல்கள் அசாதாரணமானவை என்றும் பாக்தாத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தானில் 12 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர்


பாகிஸ்தானில் குவெட்டா பிரிவினைவாதப் போராளிகளால் சென்ற மாதம் பிணை பிடிக்கப்பட்ட ஒன்பது காவல்துறையினரின் சடலங்கள், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி கலீம் உல்லா தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் நான்கு நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. ஜூலை மாதக் கடைசியில், 24 போலிஸ் அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் போராளிகள் பிணை பிடித்தனர். மூன்று போலிஸ் அதிகாரிகள் அவர்களிடமிருந்து தப்பித்தனர்.

ஏற்கனவே 12 பிணையாளிகளின் சடலங்கள் கிடைத்துவிட்டன. "இப்போது ஒன்பது போலிஸ் அதிகாரிகளின் சடலங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்தனர்" என்றார் உல்லா.

பிரிவினைவாதப் போராளிகளின் பேச்சாளரான சர்பஸ் பலோச், கடத்தலுக்கும் கொலைகளுக்கும் தாங்களே பொறுப்பு என்று இம்மாதத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் தொலைபேசி வழி கூறினார். பாதுகாப்புப் படையினர் அந்நகரிலிருந்து வெளியேற வேண்டும் என்பது போராளிகளின் கோரிக்கை.

பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வந்ததால், பாதுகாப்பைப் பலப்படுத்த பாகிஸ்தானிய ராணுவத் துருப்புகள் சென்ற மாதம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. கொலைகளுக்குப் போராளிகளே காரணம் என்று நம்பப்பட்டது.

இதற்கிடையே, குவெட்டாவில் திங்கட்கிழமை நடந்த வன்செயலில் மூன்று சியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு ஒருவர் காயமடைந்தார். இத்தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் குவெட்டாவில் சியா முஸ்லிம்களுக்கும் சுணி முஸ்லிம்களுக்கும் இடையில் பல காலமாக வன்செயல் நடந்து வருகிறது. பாகிஸ்தானில் வாழும் 160 மில்லியன் மக்களில் சுமார் 20 விழுக்காட்டினர் சியா முஸ்லிம்கள்.

இந்நிலையில், பாகிஸ்தானிய தலிபான் படையின் தலைமைப் பேச்சாளர் என நம்பப்படும் ஒருவரை பாகிஸ்தானிய ராணுவம் கைது செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் பேச்சாளரான மௌலவி ஒமர், ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மொஹ்மந்த் பழங்குடி வட்டாரத்தில் பிடிபட்டார். அண்மையில் கொல்லப்பட்ட தலிபான் தலைவர் பைதுல்லா மெஹ்சுத்தின் முக்கிய ஆதரவாளர் இவர் என்று கூறப்படுகிறது. “மிக மிக முக்கியமான ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்என்று மேஜர் ஃபசால் உர் ரஹ்மான் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி கிம் டாய் ஜுங் காலமானார்



தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கிம் டாய்-ஜுங் அவரது 83 ஆவது வயதில் ஆகஸ்ட் 18 இல் காலமானார். ஜனநாயகத்திற்காகவும் வடகொரியாவை மீள ஒன்றிணைக்கும் முயற்சிகளுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த கிம்முக்கு 2000 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.



நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கிம், இருதயம் செயலிழந்ததைத் தொடர்ந்து மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படுகொலை முயற்சிகளிலிருந்து பல தடவைகள் உயிர் பிழைத்த கிம், சிறையில் கடும் சித்திரவதைகளை அனுபவித்தவர். அத்துடன், இரு தடவைகள் நாடு கடத்தப்பட்ட கிம், பல தடவைகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

1997 இல் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்ட கிம் 2003 வரை பதவி வகித்தார். 1948 இல் தென்கொரியா உருவானது முதல் ஆளுங்கட்சி வசமிருந்த அதிகாரம் 1997 இல் கிம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் எதிர்க்கட்சி வசமாகியது. இதனால் புதிய வரலாறொன்றை ஏற்படுத்திய பெருமையையும் கிம் பெற்றார்.

2000 ஆம் ஆண்டு வடகொரியத் தலைவர் கிம் ஜோங்கல்லுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடொன்றில் கலந்துகொண்டதே தனது தலைமைத்துவத்தின் மிகப்பெரிய சாதனையென கூறி வந்தவரென்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 20, 2009

ஆகஸ்ட் 20 ராஜீவ் பிறந்த நாள்...கொங்கணி இசையில் ஓர் அஞ்சலி

ஆகஸ்ட் 20 இலங்கையின் இந்தியத் தமிழர் வரலாற்றில் கருப்பு நாள்


லங்கையின் தேயிலைத்தோட்டத்தில் வேலைச் செய்யும் இந்தியத் தமிழர்கள்இலங்கையின் இந்தியத் தமிழர் அல்லது இந்திய வம்சாவளித் தமிழர் எனப்படுவோர் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில், 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தேயிலை, ரப்பர், காபி முதலிய பெருந்தோட்டப் பயிர்ச் சாகுபடி ஆரம்பிக்கப்பட்டபோது, அத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து இலட்சக் கணக்கில் கொண்டுவரப்பட்டு இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் வழிவரும் மக்களாவர்.

ஒரு சிலர் தெலுங்கு மற்றும் மலையாள தொழிலாளரும் இலங்கை வந்தாலும் காலப்போக்கில் அவர்களது சொந்த மொழிகளைவிட்டு தமிழைப் பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு இலங்கைக்கு வந்த இவர்களின் பரம்பரையினரே இலங்கையின் புள்ளிவிபர அறிக்கைகளில் இந்தியத் தமிழர் எனக் குறிப்பிடப்படுவோராவர்.

வரலாறு 1844 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிலிருந்து இலங்கையின் காபி தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக, லுதினன் கேர்னல் ஹென்றி சீ. பேர்ட் என்பவர் 14 பேரைச் சேர்த்துக்கொண்டார். இதுவே இந்தியாவிலிருந்து உத்தியோகப்பட்சமாக வேலையாட்கள் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பமாக இருந்தபோதும், 1840 களின் தொடக்க்கத்தில் தோட்டங்கள் நிறுவப்படும் போது தோட்டங்களுக்கு அருகில் இந்திய வேலையாட்கள் காணப்பட்டனர். மேலும் 1818 ஆண்டு உதவி மன்னார் அரச அதிபர் பெருமளவிலான இந்திய கூலியாட்கள் கொழும்பு நோக்கிச் செல்வதக் கண்டதாக குறித்துள்ளார். இதன் படி 1844 ஆண்டுக்கு முன்னரும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வேலைத் தேடி தமிழர்கள் வந்தனர் எனலாம்.

இவர்கள் நாட்டின் மத்திய மலைப் பகுதிகளில் அமைந்திருந்த பெருந்தோட்டங்களிற் குடியேற்றப்பட்டனர். பிரிட்டன் முதலாளிகளின் கீழ் சுமார் 150 ஆண்டுகள் வரை கடுமையான சூழ்நிலைகளின் கீழ் உழைத்து இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக தேயிலை, ரப்பர் முதலியவற்றை உருவாக்கிக் கொடுத்தது இவர்களேயாவர். எனினும் 1948 ஆகஸ்ட் 20 இலங்கையில பிரித்தானியர் வெளியேறியதும், பல தமிழ்ப் பிரதிநிதிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இலங்கை பிரஜாவுரிமைச் சட்டத்துக்கு அமைவாக தங்களது குடியுரிமையை நிரூபிக்க முடியாமல் போனமையால் இவர்களில் மிகப்பெரும்பாலோர் இலங்கை அரசாங்கதால் நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக அவர்களது வாக்குரிமை அற்றுப்போனது.

பின்னர் இந்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் பெருமளவு மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பியனுப்ப இலங்கை அரசு முயற்சித்தது. இவ்வாறான ஒப்பந்தங்களில் ஒன்றான சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் மேற்படி தமிழர்களில் அரைப் பகுதியினருக்கு இலங்கைப் குடியரிமை வழங்குவதெனவும், ஏனையோரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும் முடிவானது, பல காரணங்களால் இது திட்டமிட்டபடி நடைபெறாது போனது. மேலும் 1983இல் இலங்கையில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழ்நிலைக்காரணமாகவும் பலர் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். 1979 புதிய சட்டம் மூலம் அனைத்து இந்தியத் தமிழருக்கும் குடியரிமை கிடைத்தபோதும் பல நடைமுறை சிக்கல்களால் இவர்கள் தொடர்ந்தும் பெரும்பாலோர் நாடற்றவர்களாகவே இருக்கவேண்டியேற்பட்டது.