Tuesday, June 30, 2009

ஹோண்டுராஸ் ஆட்சிக் கவிழ்ப்பு சதி - அமெரிக்காமீது சாவேஸ் குற்றச்சாட்டு

மானுவேல் ஜெலாயா

த்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசின் அதிபர் மானுவேல் ஜெலாயா 28.6.2009 அன்று கைது செய்யப்பட்டது ஆட்சிக் கவிழ்ப்பு சதி என்றும், அதில் அமெரிக்காவுக்கு பங்கு உள்ளது என்றும் வெனிசுலா அதிபர் சாவேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்ச்சைக்குரிய அரசியல் சட்டம் மீதான ஒரு பொது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால் ஜெலாயா கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ஒபாமா வெளிப்படையாக விளக்கவேண்டும் என்று சாவேஸ் கூறியுள்ளார்.

இது ஹோண்டுராசுக்கு மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்காவின் அனைத்து மக்களுக்கும் எதிரானது . எனவே இந்த அவமதிப்புக்கு எதிராக ஒபாமா அறிக்கை வெளியிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சாவேஸ்

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஹோண்டுராசின் மேல்தட்டு வர்க்கம் உடந்தை என்று குற்றம் சாட்டிய சாவேஸ், அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் குடியரசாக ஹோண்டுராசை மாற்ற நினைக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு அரசியல், ராணுவ, பயங்கரவாதத் தளமாக ஹோண்டுராசை மாற்றும் முயற்சி என்றும் குறைகூறியுள்ளார்.

Sunday, June 28, 2009

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) சென்னை - திருவள்ளூர் மாவட்ட மாநாடு

ந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF) சென்னை - திருவள்ளூர் மாவட்ட மாநாடு 27.06.2009 அன்று மாலை 5 மணியளவில் சென்னை அசோக் நகர் கோகுலம் பார்க் ஹோட்டலில் திரைப்பட இயக்குனரும் மாவட்ட துணைச் செயலாளருமான தோழர்.ரதன் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கே.என்.கமலாகரன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. சென்னை மாவட்டச் செயலாளராக வழக்கறிஞர் .இளங்கோவன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக பத்திரிகையாளர் ,குணசேகரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.மாநில செயலாளர் தோழர் முத்தியாலு, சி.கபிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டின் முடிவில் தோழர் எம்.பி.சங்கர் தலைமையில் 'இந்திய அயலுறவுக் கொள்கை ஒரு பார்வை' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், .இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினர்.
ராணா
நன்றி கூறினார்.

சென்னை மாவட்ட புதிய நிர்வாகிகள்

கௌரவத் தலைவராக .கருணாகரன். மாவட்டத் தலைவராக கே.என்.கமலாகரன், மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் .இளங்கோவன் ,துணைச் செயலாளராக தோழர்கள் ரதன் சந்திரசேகர், எம்.பி.சங்கர், மாவின், .உசேன், டாக்டர் குழைக்காதன், வழக்கறிஞர் கருணாகரன் , பொருளாளராக அனிதா காயத்ரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய மாவட்ட நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்

மாவட்டத் தலைவராக போஸ், மாவட்ட செயலாளராக பத்திரிகையாளர் .குணசேகரன், துணைச் செயலாளர்களாக தோழர்கள் மதிவாணன், ஞானமூர்த்தி, மந்திரமூர்த்தி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். புதிய மாவட்ட நிர்வாகக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.




Thursday, June 25, 2009

இஸ்கப் சென்னை திருவள்ளூர் மாவட்ட மாநா டு


மேற்கூறப்பட்ட நிகழ்வு 27.06.2009 சனி மாலை 4 மணிக்கு சென்னை அசோக் நகர் கோகுலம் பார்க் ஹோட்டலின் ஐந்தாவது தளத்தில் தோழர் கல்யாணசுந்தரம்-பத்மநாபா அரங்கில் உ. கருணாகரன் தலைமையில் நடைபெறுகிறது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். எனவே, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்குமாறு சென்னை மாவட்டச் செயலாளர் கே.என்.கமலாகரன் [குகன்] அழைப்பு விடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, 'இந்திய வெளியுறவுக் கொள்கை ஒரு பார்வை' என்ற தலைப்பில் மாலை 6 மணிக்கு நிகழும் பொதுக் கருத்தரங்கத்தில் கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்,இஸ்கப் பொதுச் செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் க. இளங்கோவன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். அனைவரும் பங்கேற்கலாம்.

Monday, June 22, 2009

மலேசிய மொழிபெயர்ப்பு கவிதைகள்




















மௌனம்


மௌனத்தினூடே
போய் வருகிறேன் என்றாள்

நாங்களும் பிரிந்தோம்
அக்கணமே
ஒருவரையொருவர்
அறிந்து கொள்ளாமலே

(... மலாய் மொழியில் : NOOR S.M)

***********************************

ழுத்தில்லா புத்தகங்களை
வாசித்துக் கொண்டிருப்பது...

பக்கங்களில்லா புத்தகங்களை
புரட்டிக் கொண்டிருப்பது...

ஓவியங்களற்ற புத்தகங்களின்
காட்சிகளில் இலயிப்பது...

எழுத்து வானத்தில்
எழுதப்பட்டதாக
பக்கங்கள்...

மேகங்களுக்கிடையில்
புரண்டுக் கொண்டிருப்பதாக
ஓவியங்கள்...

கனவில் காணக்கிடைத்த
காதலியாக...
ரகசிய புத்தகம்
வாசிக்கப்படுகிறது

(... மலாய் மொழியில் : KEMELA) தமிழில் : பா.. சிவம்

Sunday, June 21, 2009

பண்பாடு-கலாச்சாரம் ...


கே.சித்ரா

நேஷனல் ஜியாகிரபி சேனலில் NO BORDER என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். அமெரிக்க- தாலிபான் படைகளுக்கிடையே ஏற்பட்ட போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிய குடிமக்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆவணப்படம் அது.

சண்டைக்கு பயந்து, தாங்கள் சமீப காலமாய்வசித்துவந்த குடியிருப்பைத் துறந்து, பாமீர் மலைகளில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த குகைகளில் தங்கியிருக்கும் பாவப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வை மீர் என்ற எட்டு வயது சிறுவனின் பார்வையிலிருந்து கூறியிருந்தார்கள்.

உலகின் மிகப் பழைமை வாய்ந்த, தாலிபன்களால் தகர்த்தெறியப்பட்ட பாமீர் மலைப் பகுதியின் புத்தர் சிலைகளையும், அதை ஒட்டி அமைந்திருக்கும் சரித்திரப் புகழ் வாய்ந்த குகைகளையும், உயிருக்கு பயந்து அதில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் படும் சிரமங்களையும், துயரங்களையும் மிக அற்புதமாக, இயற்கையாகப் படம் பிடித்திருந்தனர்.

போரில் தனது 15 வயது மகளைத்தவிர அனைத்தையும் பறிகொடுத்த ஒரு கிழவர் [60 வயது இருக்கலாம்] . வாழ் சூழல் அவரை மிகவும் முதுமைப்படுத்தியிருந்தது.

அதேபோல, தன் தாயைத் தவிர அனைத்தையும் இழந்திருந்த ஒரு இளைஞன் [23 வயது இருக்கலாம்]. தாய்க்கு 50 / 55 இருக்கலாம். இவரும் தன் பெரும்பாலான பற்களையெல்லாம் இழந்து பொக்கையுடன் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். அவரது முக்காடிட்ட முகத்திலிருந்து குழிவிழுந்த கண்களையும் பொக்கை வாயையும்தான் அதிகம் காண முடிந்தது.

ஒரு காட்சியில் அந்தப் பெரியவர் இளைஞனிடம் சொல்கிறார்: "இழப்பதற்கு இனி என்னிடம் எதுவும் இல்லை. உன் நிலையும் அதுதான். ஆயின், உனக்குக் கொடுப்பதற்கென்று எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். எனக்குக் கொடுப்பதற்கு உன்னிடம் ஒரு தாய் இருக்கிறாள். என்ன சொல்கிறாய்?"

இளைஞன் சம்மதிக்கிறான். அவருடைய பதினைந்து வயது மகளை மணந்து கொள்கிறான். அவன் தாயை இந்தப் பெரியவர் மணந்து கொள்கிறார்.

மணம் என்றால், மேளதாளம், தாலி, விருந்து இவற்றுடன் அல்ல, அப்படி அப்படியே ஜோடி சேர்ந்து ஒரே குகையில் வசிக்கத் தொடங்குகின்றனர். இந்த இளம் ஜோடிக்கு ஒரு பெண்குழந்தை [8 மாத அளவில் ]. வயதான ஜோடிக்குப் பிறந்தவன்தான் இந்த ஆவணப்படத்தின் நாயகன் மீர் [8 வயது ].

இது ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம், கலாச்சார சீரழிவு, பண்பாட்டுப் பேரழிவு, அது இது , இவையல்ல நான் சொல்ல வருவது.

முடிந்த முடிவான பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. மாற்றம் ஒன்றுதான் நிலையானது. இவர்களின் உறவுநியாயமா நியாயமற்றதா என்பதல்ல கேள்வி.

ஒருவரின் வாழ்சூழல் , தேவை, சந்தர்ப்பம், இவையெல்லாம்தான் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தீர்மானிக்கிறது. நமக்கு புனிதமானதாகவும் இருக்கும் எந்தவொன்றும் மற்றவர்க்கும் அவ்வாறேஇருக்கவேண்டிய அவசியமில்லை. அதைத் தீர்மானிக்க வேண்டியது அவரவருடைய வாழ்சூழல் மட்டும்தான்.

நடத்துங்கள்...

ங்கள் மேடை. உங்கள் நாக்கு.
எதுவேண்டுமானாலும் பேசுங்கள்!

உங்கள் பேனா. உங்கள் அச்சகம்.
எதுவேண்டுமானாலும் எழுதுங்கள்!

உங்கள் தராசு உங்கள் எடைக்கல்.
விமர்சியுங்கள்!

உங்கள் சுவர்கள். உங்கள் காகிதம்
எதுவேண்டுமானாலும் ஒட்டுங்கள்!

உங்கள் வாத்தியம். உங்கள் கச்சேரி.
எதுவேண்டுமானாலும் வாசியுங்கள்!

உங்கள் தூரிகை. உங்கள் வர்ணம்.
எதுவேண்டுமானாலும் வரையுங்கள்.

ஆனால்... நாளை...
காலத்தின் விமர்சனம் 'உங்கள் பிணங்களைக்கூட
தோண்டியெடுத்து வந்து தூக்கில் போடும்'
என்பது மட்டும்
ஞாபகம் இருக்கட்டும்!

கவிப்பேரரசு வைரமுத்து

Saturday, June 20, 2009

காம்ரேட் எம்.கே!


சில தலைவர்களின் வாழ்வும், நினைவும் மறக்கப்படுகின்றன அல்லது மறக்கடிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு தலைவர்தான் காம்ரேட் எம்கே! தோழர் கல்யாணசுந்தரம். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் முதன்மை வரிசையில் போற்றத்தக்கவர்.

ஒரு காலத்தில் "கல்யாணசுந்தரம் கட்சி' என்றுதான் தமிழ்நாட்டுப் பாமரர்களால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்துகொள்ளப்பட்டது. அவரது நினைவும் இன்று ஒரு சடங்காகவே ஆகிவிட்டது. ஆம், ஜூன் 20 அவரது பிறந்தநாள். அந்த ஞாபகார்த்ததில்தான் இந்தக் கட்டுரை.

வாழ்வே போராட்டக்களம் என்று சொல்வார்களே அது எம்கேவுக்குப் பொருந்தும். தூங்கும்நேரம் தவிர அவருக்கு எப்போதும் அரசியல்தான். கட்சியோடு நில்லாமல் தொழிற்சங்கத் தலைவராகவும் அவர் பரிணமித்ததால் எப்போதும் மக்கள், தேசம் என்கிற சிந்தனைதான். தமிழகத்தின் பல அரசியல் மாற்றங்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அவர் காரணமாக இருந்திருக்கிறார்.

எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்தில் எம்கேவுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த உறவை எம்ஜிஆர் கடைசிவரைப் பேணிவந்தார் - அரசியல் வேறுபாடுகளையும் கடந்து.

பெரும் வன்முறைச் சூழலில், வட இந்தியாவில் ரயில்கள் ஓட்டமுடியாத அசாதாரண நிலைமையில், பண்டித நேருவின் அழைப்பை ஏற்று ரயில்களை ஓட்டிக்காட்டிய தீரம் அவருக்கே உரியது. பிரிட்டிஷ் ஆட்சியில் அரசாங்கத்தால் அவர் தேடப்படும் நபராக இருந்தார். அவரது படம் சினிமாத் தியேட்டர்களில் காட்டப்பட்டு அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

ரயில்வேத் துறையின் மாபெம்ரு தலைவராக அவர் விஸ்வரூபம் எடுத்து நின்ற காலத்தில், ரயில்வேத் தொழிலாளர்கள் பெற்ற நன்மைகள் இன்றளவும் அவர் பெருமையைப் பறைசாற்றுகின்றன. துறைமுகத் தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவராக அவர் இருந்தார். அந்தத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் அவர் தள்ளாத வயதைப் பொருட்படுத்தாமல் ஈடுபாட்டிருந்த நேரத்தில்தான் மரணம் அவரை கொள்ளைகொண்டது.

இந்திய சோவியத் நட்புறவில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு வார்த்தைகளைக் கடந்தது. சோவியத் தேசம் இந்தியாமீது காட்டிய அதீத அன்புக்கு அவர் எல்லையற்ற நன்றி உணர்வைக் கொண்டிருந்தார். நட்புறவு இயக்கத்தில் எம்கேவின் பங்களிப்பு அளவிடமுடியாதது.

பி ஆர் எல் எப் தோழர்களுக்கு அரசியல் வகுப்பு...

இலங்கைப் பிரச்சனையில் அவரது பார்வை தொலைநோக்கானது. தமிழ் விடுதலை இயக்கத்தில் பாசிசம் தலைதூகிவிடக்கூடது என்பதில் அவர் ஆழ்ந்த கவனத்தில் இருந்தார். போராளிகளுள் இடதுசாரி சிந்தனையைத் தலையாயக் கொள்கையைக் கொண்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் பத்மநாபாவுடனும், அதன் தோழர்களுடனும் தோழமை பூண்டு அந்த இயக்கத்தை வழி நடத்துவதிலும் பெரும் பங்காற்றினார்.

தேசத்தின் மிகப் பெரும் தலைவர்களுடன் நட்பு பூண்டு, அதன்மூலம் ஏழைஎளியோரின்
கண்ணீர் துடைக்க முனைந்தவர் எம்கே. அவர் மனிதர்களிடம் பகைமை பாராட்டாத உயரிய பண்பாளர். அரசியல் வேறுபாடுகள் அவரை தனிமனிதரை வெறுக்கத் தூண்டியதில்லை. இந்திய இடதுசாரி இயக்கத்தில் அவர் ஒரு பெரும் புரட்சியைத் தோற்றுவித்த இரும்பு மனிதர். தேசிய ஜனநாயக சக்திகளை ஒதுக்கிவைத்துவிட்டு அரசியல் நடத்துவதில் அவர் விருப்பம் இல்லாதவராக இருந்தார்.

இசையிலும் கலையிலும் நாட்டம் கொண்ட ஓர் மென்மையான மனிதராக் அவர் இருந்தபோதிலும் அவரது உள்ளம் உருக்குலையாத உறுதி வாய்ந்தது. தனது ஒரே மகளின் மரணச் செய்தி வந்தபோதுகூட, மனதைக் கல்லாக்கிக்கொண்டு, துயரை வெளிக்காட்டாமல், கட்சிக் கூட்டத்தில் உரையாற்றி முடித்த பிறகுதான் இல்லம் திரும்பினார்.

இடதுசாரி இயக்கம் பெரும்பாலும் தனிநபர் வழிபாட்டில் ஈடுபடுவதில்லை. அதில் இழப்புகளும் உண்டு. அப்படி நேர்ந்த ஓர் இழப்புதான் எம்கேவின் பெருமைகளை தமிழகம் போதுமான அளவு உணராதது.

ஆனால் வரலாறு காத்திருக்கிறது, உரிய நேரத்தில் எம்கேவை உயர்த்திப் பிடிக்க!

செந்தோழன்

Friday, June 19, 2009

ஓர் இந்தியக் கனவு...

க்கத்து தேசம் ஈழம்
துக்கத்தில் வாழும் கோலம்
மாற்றிடக் கை கொடுப்போம்
கொடுங்கூற்றினை வேரறுப்போம்

விழிகளில் வழியும் சோகம்
விரைவினில் தீர்ந்து போகும்
மனதினில் விழுந்த காயம்
பொழுதினில் மாயம் ஆகும்

தமிழ் தமிழ் என்று இனியும்
மொழிவெறி கொள்ளல் இல்லை
அமிழ்தினும் இனிய தமிழை
அகற்றிட யாரும் இல்லை

மானுடம் ஒன்றை மட்டும்
மனதினில் கொள்ளவேண்டும்
வாழ்விற்கு வலிமை சேர்க்கும்
வாழ்தலில் முறைமை வேண்டும்

மதவெறிக் கொள்கை மாற்றி
இதமுறக் கூடி வாழ்வோம்
இந்துவும் முஸ்லிமும் சேர்ந்து
சொந்தமாய் வாழ்தல் காண்போம்

இந்தியா நமது தேசம்
இந்தியம் கொள்கை ஆகும்
இந்துமாக் கடலில் அமைதி
இந்தியக் கனவு ஆகும்

உலகத்தின் பொது விதியை
இந்தியா உலகிற்களிக்கும்
தமிழ்க் கவி பாரதி கண்ட
கனவினைப் பரிசளிக்கும்!

குழந்தைக் கவிஞன்