Monday, August 3, 2009

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றிமுடிக்க ஓரிரு வருடங்கள் செல்லும் - இந்திய இராணுவ நிபுணர்கள்

லங்கையில் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது வன்னிப் பிரதேசம் உட்பட வடக்கு கிழக்குப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இன்னும் ஓரிரு வருடங்களாவது செல்லும் என்று, கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுவதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையின் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை ஓரளவுக்கேனும் அகற்றி முடிப்பதற்கு இன்னமும் ஓரிரு வருடங்கள் எடுக்கும். அதற்குப் பின்பும் மேலும் ஒரு வருடத்துக்குப் பின்னரே மக்கள் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மீளக் குடியேறலாம் என்று கூறக்கூடியதாகவே கள நிலை உள்ளது.


உலகிலேயே நிலக்கண்ணி வெடிகள் மிக அதிகளவில் புதைக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். கடந்த 25 வருட கால யுத்தத்தின் போது வடக்கிலும், கிழக்கிலும் பரவலாகப் பல இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் புலிகளாலும், அரச படைகளாலும் புதைக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இலகுவானவையாக அமையாது. எங்களின் பணி மிகவும் மெதுவாக நடப்பது போல வெளியுலகத்துக்குத் தோன்றினாலும் அது யதார்த்தத்தில் உண்மையாக இராது. ஏனெனில், நாம் மிகவும் கவனமாக நிலத்தின் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாகத்தான் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுப்போம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக இந்தியாவிலிருந்து முன்னாள் இராணுவ வீரர்களைக் கொண்ட 80 புதிய நிபுணர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ள இவர்கள், ஏற்கனவே கண்ணிவெடி அகற்றும் பணிக்காக இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய நிபுணர்களுடன் இணைந்து இவர்கள் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.


இந்த 80 பேரடங்கிய புதிய குழுவிற்கு இந்தியாவின் முன்னாள் மேஜர் ஜெனரல்கள் இருவர் தலைமைப் பொறுப்பேற்றுள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment