

ஐ.என்.எஸ்.அரிஹந்த் (INS ARIHANT) என்பது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரான அணுக்கரு ஆற்றலினால் ஆன முதல் நீர்மூழ்கிக் கப்பல். இதனை வடிவமைத்து உருவாக்கியதன் மூலம், ரஷ்யா , அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஆறாவது நாடாக இந்தியா உலக அரங்கில் சிறப்பைப் பெற்றுள்ளது.
அரிஹந்த் என்கிற சமஸ்கிருத சொல்லுக்கு 'எதிரிகளை அழிப்பவன்' என்பது பொருள். அதன் முதல் வெள்ளோட்டத்தை 2009, சூலை 26 அன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விசாகப்பட்டினத்தில் தொடங்கி வைத்தார். 'போர்க்கப்பல்களைப் பெண்கள் தான் தொடங்கி வைக்க வேண்டும்' என்பது இந்தியக் கடற்படையின் வழக்க முறைமை. அதன்படி பிரதமரின் துணைவியார் குர்ஷரன் கௌர் கப்பலின் முதல் பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிரிவின் தலைமையகம் விசாகப்பட்டினத்தில் செயல்படுகிறது. இது நாட்டின் கிழக்குப் பகுதியைப் பாதுகாப்பதோடு, இந்தியத் துறைமுக நகரங்கள், துறைமுகங்கள், எண்ணெய் வயல்கள் மற்றும் கடல் சார்ந்த சொத்துகள் ஆகியவற்றுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது. கடல்வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் கடலோரப் பாதுகாப்பிலும் இந்தக் கிழக்குப் பிரிவு முக்கியப் பங்கு ஆற்றுகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் ராம்பிள்ளி பகுதியில் புதிதாக கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதனுடைய வலுவைக் கூட்டும் வகையில் அணுஆற்றல் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவே உள்நாட்டில் வடிவமைக்கத் திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல் வகைகளில் இந்தவகைக் கப்பல் இந்தியக் கடற்படையின் 'முன்னணித் தொழில்நுட்பக் கலன்' என்கிற திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. இதனை இந்திய கடற்படை, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம், பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு, இந்திய அணுவாற்றல் துறை ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ளன.
அணுவாற்றலில் இயங்க வல்ல நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து உருவாக்கிக் கடற்படையின் பலத்தினை அதிகரிப்பது. 26.11.2009-ல் இதன் வெள்ளோட்டம் தொடங்கி விட்டது. இதன் இயக்கத்துக்குத் தேவையான 80 மெகாவாட் அணுமின் நிலையம் கல்பாக்கம் பாபா அணுவாற்றல் ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப்பட்டு கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை உருவாக்குவதில் எழுந்த தொடக்கநிலை சிக்கல்களை எதிர்கொண்டபோது உருசியா இந்தியாவுக்கு ஆக்கபூர்வ உதவிகளைச் செய்துள்ளது. இதன் இயக்கத்திற்குத் தேவையான 'என்ரிச்டு' (ஊட்டம்பெற்ற) யுரேனியத்தை அணுவாற்றல் துறை தருகிறது.
அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலில் ஏவுகணைகள் பொருத்தி இந்தியா தரைவழி, வான்வழி, கடல்வழி அணு ஆற்றல் கலன்களைப் பயன்படுத்த வல்ல நாடு என்கிற நிலையை அடைவது. நீருக்கடியில் ஏவுகணைகளை இயக்கும் நுட்பத்தில் ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி அமைப்பு தேர்ச்சி பெற்றிருப்பதால், அரிகந்த்தின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்த நிலையில் K-15 வகை ஏவுகணைகள் அதில் பொருத்தப்படும். அது இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சகாரிக்கா (SAGARIKA) என்கிற 750 கிமீ. தூரம் சென்று தாக்க வல்ல ஏவுகணை மற்றும் அக்னி-3 ஏவுகணை ஆகியவையும் அரிகந்தில் பொருத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அடுத்த இரண்டு அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல்களின் பாகங்கள் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தாரால் குஜராத் மாநிலம் அச்சிராவில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
2025-க்குள் இந்தியா ஐந்து ஏவுகணை ஆற்றலுடன் கூடிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என்பது பாதுகாப்புத் துறை வட்டாரத் தகவல்.
'இந்தியா அணு ஆயுதப் போட்டியை மேலும் உந்திவிட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் படைத்துறைக்கு செல்வது அதன் மக்கள் நல மேம்பாட்டுக்கு தடையாக உள்ளது. தெற்காசியாவின் அமைதிக்கு இது கேடு விளைவித்துள்ளது' என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது.
1 comment:
26-11-2009?
Post a Comment