Monday, August 3, 2009

இந்தியாவுடன் பேசத் தயார் : பாகிஸ்தான் அறிவிப்பு


ந்த ஒரு பிரச்னைக்கும் போர் என்பது தீர்வாகாது என்று குறிப்பிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராஸா கிலானி, இந்தியாவுடன் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடபாக செய்தித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் இன்று அளித்த பேட்டியில், "இரு நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னைகள் குறித்து பேசித் தீர்க்க வேண்டும்," என்றார்.

இந்தியாவுடனான உறவு குறித்து கேட்டதற்கு, "எப்போதுமே சம உரிமை அடிப்படையிலேயே இருக்க வேண்டும். அதை பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது," என்றார் கிலானி.

"இரு நாட்டிலும் உள்ள 1.5 பில்லியன் மக்களின் வேலைவாய்ப்பின்மை, விலை உயர்வு, கட்டமைப்பு வசதியின்மை, அடிப்படை வாழ்வாதாரத் தேவைகள் போன்ற பிரச்னைகளைப் போக்க வழிவகை செய்ய வேண்டும்," என்று கூறினார்.

மேலும், "காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து வகையான பிரச்னைகள் குறித்தும் பேசித் தீர்ப்பதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. எந்தப் பிரச்னைகளுக்கும் போர் தீர்வாகாது," என்றார் பாகிஸ்தான் பிரதமர் கிலானி.

அதேநேரத்தில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்திய அரசு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment