விருதுநகர் மாவட்ட இஸ்கப் சார்பில் 'ஒரு கூரையின்கீழ்...' என்ற தலைப்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்...
முதல் பரிசு பெற்ற கவிதை...

மா.அய்யர்
இளங்கணிதம்-ராஜுக்கள் கல்லூரி,
இராஜபாளையம்.
மங்களகரமாய்
மலைக்கூரையின் மடியில் தவழ்ந்த
கிராமத்தை...
கண்ணுக்குக் குளிர்ச்சியாய் காட்சி தந்த
தூரத்துப் பச்சையை...
நெருக்கத்தில் பார்த்தபோது...
விடியலை கோழிக்குத் தெரியப்படுத்தி
எஜமானர்களிடம் குனிந்து குனிந்து
கூனாய்ப் போன மனதுடன்
கூலிக்கு வேலை செய்ய
மண்வெட்டியுடன் மடைக்குப் புறப்பட்ட
மனிதர்களையும்...
பிஞ்சுக் குழந்தைகள்
பஞ்சத்தில் கட்டுண்டு
பஞ்சுப்பொதி சுமந்த
தோரணையையும்...
தாத்தா முதல் பெயரன்வரை...
கூலிக்கு உழைத்தும்
ஒருவேளைப் பசியை
இருவேளைச் சம்பளத்தில்
சமாதியாக்குவதையும்...
திருமணத்தை நோக்கிய வயதில்
வருமானத்தை எதிர் நோக்கி
வயலுக்கு அறுவடை செய்யப் புறப்பட்ட
அம்மங்கையரின் அழகையும்...
கூர்ந்து நோக்கிய கண்கள்
குறுகுறுத்தன
'ஒரு கூரையின்கீழ்'
இத்தனை குதறல்களா?
இரண்டாம் பரிசு பெற்ற கவிதை
செ.ஆனந்தி, இரண்டாமாண்டு வேதியல் [முதுநிலை]
எஸ்.எப்.ஆர் கல்லூரி, சிவகாசி.
இந்திய தேசத்தில்
முளைத்திருக்கும் களை பல....
சாதிப் பூசலுக்கு நட்சத்திரங்களாக
ஒளிரும் அரிவாள்!
இன்னும் துருப்பிடித்த இரும்பாக
மனித மனங்கள்...
வகுப்பறையில் போதனை-
சாதிகள் இல்லையென்று
வகுப்புவாதம் மலிந்த சமுதாயத்தில்....
எல்லா மதங்களும்
மகத்தான நெறியை போதித்தும்
இன்னும் மதவெறி
ஆயுதமாக மனிதனின் கையில்!
படக்காட்சிகளை ரசிக்கும் மனித நெஞ்சமே...
பரிதவிக்கும் நாட்டின் நிலை தெரியவில்லையா?
இலட்சியத்துக்கு வழி வகுக்கும்
கல்விக்கூடங்களும்
இலட்சங்களைப் பெறுவதே இலட்சியமாக.
மரங்களை வெட்டிப் பிணமாக்கியதால்
திக்கெங்கும் வறட்சிப் பேய் உலா...
பெண்ணால் உலகம் கண்ட மனிதனே...
பெண்ணினத்தை அழிக்க கள்ளிப்பாலா...?
கண்ணாக நாட்டைப் பேண
வேண்டிய இளைஞனே...
'கன்'னை ஏந்தி தீவிரவாதச் செயலா?
உன் வாழ்வுக்கு வரமாக வருபவளிடம்
அன்பை எதிர்பாராமல்
அட்டிகையைக் கேட்கிறாயே...
இச்செயல்களால் புண்பட்டிருக்கும்
இந்திய தேசத்தை
நல்மருந்தான செய்கையால்
மனிதா தேற்று!
மூன்றாம் பரிசு பெற்ற கவிதை...

மு.கார்த்திகை செல்வி,
இளங்கலை இரண்டாமாண்டு [ஆங்கில இலக்கியம்]
வே.வ.வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி விருதுநகர்
ஒன்றுகூடித்தான் பறித்தோம்
சுதந்திரக்கனியை நாம்!
பகிர்ந்துண்டு ருசித்தோமா?
கையில் கிடைத்தவற்றை
பையில் பதுக்கிட்டோம்!
இசைதேடும் எண்ணமதில்
தனித்தனியே தலையானோம்!
மனிதம் விற்றுவிட்டு
மதம், சாதி வாங்கி வந்தோம்!
அரசியல் போர்வைக்குள்
அன்பு தொலைந்திடவே
வாழ்வின் பயணமெலாம்
வன்முறை சுவடுகள்...
மீண்ண்...டும் ...
அந்நியப் பேரமதில்
வேசியைப் போல் தேசியம்!
என்று தணியும்
இக்கொடுமையின் மோ[சோ]கம்...?
இரை தேடும் பறவையெலாம்
இரவினிலே சேர்வதுபோல்
கரையான நெஞ்சமெலாம்
கனிவுடனே சேர்ந்திடுவோம்
மீண்டும் ஒரு கூரையின்கீழ்....!
No comments:
Post a Comment