


இந்தியப் பெண் எழுத்தாளர்களுள் மாபெரும் புரட்சியை நிகழ்த்திய எழுத்தாளரும், கவிஞருமான கமலா தாஸ் தனது 75ஆம் வயதில் புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் 1934 மார்ச் 31 இல் பிறந்த கமலாவுக்கு மாதவிக்குட்டி என்றுதான் வீட்டில் பெயர். ஆறாவது வயதிலேயே எழுதத் தொடங்கிய அவரது எழுத்து பதினான்காம் வயதில் அச்சேறத் தொடங்கியது.மாதவ தாசை மணந்த பிறகு கமலா தாசாக மாறிய மாதவிக்குட்டியின் முதல் கவிதைத் தொகுப்பு 'SUMMER IN CALCUTTA' (1965).
1976 இல் அவர் எழுதிய சுயசரிதை MY STORY உலகத்தை ஒரு கலக்கு கலக்கியது. 15மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலில் கமலா தாஸ் பட்டவர்த்தனமாக எழுதிய அந்தரங்க வாழ்க்கை பலரையும் திடுக்கிட வைத்தது. ஆபாசம் என கூச்சல் ஒருபக்கம் எழுந்தபோதும் கமலதாஸ் சளைக்காமல் தனது எழுத்துப்போரைத் தொடர்ந்தார் தனது கணவரின் உறுதியான ஆதரவுடன்.
பிலிபைன்ஸ் ஆசியன் விருது, கேரளா இலக்கியக் கழக விருது, அஞ்சாத எழுத்துப் பணிக்கான சிமன்லால் விருது, ஆசான் உலக விருது போன்ற விருதுகளை குவித்த கமலாதாஸ் சிறந்த ஆங்கிலக் கவிதைக்காக 1985 இல் சாகித்திய அகடமி விருதையும் வென்றார். 1984 இல் சிறந்த இலக்கியவாதிக்கான நோபெல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கவிஞர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், குழந்தைகளுக்கான எழுத்தாளர் என்று பன்முகம் காட்டிய கமலா தாஸ் லோக் சேவா கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1999 இல் இஸ்லாம் மதத்துக்கு மாறி கமலா சுரய்யாவாக தன்னை அறிவித்துக்கொண்டவர் பின் அதிலிருந்தும் விலகினார். "எந்த மதமும் பெண்ணுக்கு விடுதலை தருவதில்லை" என மனம் நொந்தார். யாரும் சொல்லக் கூசிய மொழிகளில் பெண் விடுதலைக்கு, அவர்களது பாலியல் சுதந்திரத்துக்கு உரத்து முழங்கியவர் கமலா தாஸ். " கடிப்பது கொசுவின் இயல்பு, அதன் வாழ்க்கை. அதனால் அதை அடிப்பதைக்கூட விட்டுவிட்டேன்" என்று அவரது சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவரது வாசகர்களுள் ஒருவராகத் தம்மைக் குறிப்பிட்டு, "பெண்ணியத்துக்காக, பெண்மையின் மேன்மைக்காக எழுதப்பட்ட அவரது கவிதைகள், பிரபலமான நவீன இந்தியப் படைப்பாளியாக அவரை புகழின் உச்சியில் ஏற்றின" என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment