Sunday, June 7, 2009

எம் பிள்ளைகள் உன்னை வழிபடுவர்

ஈரோடு ஜீவி

இது எங்கள் ஜம்ரத்!*
வா ... ராட்சசனே வா
உன் அசுரப் பிடியில்
ஒருவர் பின் ஒருவராய்
நாங்கள் வீழ்வோம் ...
நசுங்குவோம் ... மரிப்போம் ...
எம் எலும்புகள் உன் பாதையின்
தடைக் கற்களாகும்.

எம் ரத்தச் சேற்றில்
உன் கனத்த மேனி புதையும்.

உன் குண்டுகள் வெடித்துத் தீரும்.

உன் எரிபொருள் தீர்ந்து ஓட்டம் நிற்கும்.

பின் ...
எம் பிள்ளைகள் உன் சக்கரத்தை
உருட்டி விளையாடுவர்.

உன்னை உருக்கி அவர்கள்
சவரக் கத்திகள் செய்வர்.

உன் இரும்பு இரப்பை
எம் பெண்களின் நீர்த்தொட்டியாகும்.

எம் குழந்தைகள் உன்னைச் சுற்றி
ஒளிந்து விளையாடுவர்.

நாட்கள் செல்லும்.

ஆண்டுகள் ஓடும்.

எம் பிள்ளைகளின் பிள்ளைகள்.

தம் முகம் அறியாத மூதாதையரின்
வெற்றிச் சின்னமாய்
உன்னை வழிபடுவர்.

சிலுவை போல் ...
சேவற் கொடிபோல் ...
ரமலான் போல் ...
*ஜம்ரத் - சாத்தானைக் கல்லெறிந்து விரட்டல்.

ISCUF மாநில மாநாட்டு மலர்

No comments:

Post a Comment