Friday, June 12, 2009

இராணுவ வெற்றி மட்டுமே இலங்கையில் அமைதியை தராது.!

லெப்டினென்ட் ஜெனரல் .எஸ்.கல்கத்

இரண்டு
ஆண்டுகளுக்கு முன் பிரசுரமான ஒரு கட்டுரையில், ஒரு மாபெரும் மனித ப்பேரழிவு இலங்கையில் நிகழ காத்திருக்கிறது என்று எழுதியிருந்தேன். இன்றைக்கு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்துள் தஞ்சமடைந்துள்ளனர். சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் பார்த்துக்கொண்டிருக்க இந்த அவலம் அரங்கேறியது.

எல்.டி.டி.. தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக போராடிய அதே வேளையில், இலங்கை ராணுவம் தனது நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும், இறையான்மைக்காகவும் சண்டையிட்டது. இதன் நடுவே ஆயிரக்கணக்கான அப்பாவிகள் மனிதாபிமானமற்ற முறையில் நசுக்குண்டனர். இதுவே எல்.டி.டி.. மற்றும் அதன் தலைவர் பிரபாகரனுக்கு இறுதிப் போராக இருந்திருக்கக் கூடும். ஆனால் நிச்சயம்மாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு அப்படியல்ல. இன முரண்பாடுகளுக்கு பிரபாகரன் காரணமல்ல, ஆனால் இன முரண்பாடுகளே பிரபாகரன் உருவாவதற்கு காரணம் என்பதை நாம் மறந்து விடவேக் கூடாது. இலங்கை அரசாங்கம் முரண்பாடுகளுக்கான வேறை கண்டறிய முற்படாமல் எல்.டி.டி.. அல்லது அதன் தலைவரை முறியடித்து விட்டதாக கருதுமானால், அது ஒரு தற்காலிக வெற்றியே தவிர வேறல்ல.

.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா,வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோருடன் கல்கத்.

எல்.டி.டி.. யின் தோல்வி என்பது அது தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட காயம் தான். 2007 ஆம் ஆண்டு வெற்றிக்குப் பின்னர் அவர்கள் தமது கண்களைக் கட்டிக் கொண்டனர். கிளிநொச்சியைத் தலைநகராக அமைத்துக் கொண்டு, ஒரு கற்பனையான அரசாங்கத்தினூடே தாங்கள் 'ஈழம்' அடைந்து விட்டதாக நம்பத் தொடங்கினர். ஒரு கெரில்லா இயக்கம்தங்களை ஒரு அரசாங்க இராணுவம் போல எண்ணிக் கொண்டு, அதைப் போலவே செயல்பட்டு இவ்வாறான நடவடிக்கைகளில் எடுபட்டது. இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பிராபாகரனும் அவரது அமைப்பும் 1988 இல் தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் இந்தியா முன் வைத்த கருத்துகளை நிராகரித்ததுதான். ஜனநாயக ரீதியான இந்தக் கருத்துகள் பிரபாகரனுக்கு வெறுப்பையே தந்தன.

1987 ஆம் ஆண்டின் இந்திய - இலங்கை ஒப்பந்தமும், இந்திய அமைதிப்படையின் நடவடிக்கைகளும் இலங்கை அரசியல் சாசனத்தின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வழிகோலின. தமிழ் மக்களின் நெடுநாள் கனவாக இருந்த வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்ந்தளிப்பு இதன்மூலம் சாத்தியமாகும் வாய்ப்புகளும் வாய்த்தன. ஆனால் வட கிழக்கு பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டதும்,இருப்பும் தன்னாட்சி அதிகாரமும் சமரசத்துக்குள்ளாகின இருபது ஆண்டு வன்முறைப் போராட்டம் வாக்குறுதிகளை முறித்துப் போட்டன; இரு தரப்பிலும் மனித உரிமை மீறல்களை விதைத்தன; சிங்கள,தமிழ் மக்களிடையே ஆறாத காயங்களையும், இறுக்கமான பதற்றத்தையும் ஏற்படுத்தின.

அரசியல்,பொருளாதார,சமூக ரீதியான முன்னெடுப்புகள்தாம் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுசெல்லும் தேவைகளே தவிர, ராணுவத் தீர்வு அல்ல. அரசாங்க சக்திகளின் வெற்றி என்பது பெரும்பான்மையான மக்களுக்கு மகிழ்வைத் தரலாம். ஆனால், மகிந்த ராஜபக்சவின் அரசியல் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தரும் என்பதே அவர்கள் முன் எழும் மிகப் பெரிய கேள்வி. தன கட்சிக்குள்ளும் வெளியிலுமுள்ள சிங்கள இனவெறி சக்திகளுக்குமுன் அவர் எவ்வளவு தூரம் தாக்குப் பிடித்து நிற்கக்கூடும் என்பதும் கேள்விக்குறியே. அடுத்த முக்கிய அரசியல் முடிவை அவர் மேற்கொள்ளும் முன் ஒரு வாக்கெடுப்புக்கு அவர் தயாராகக்கூடும்.

மற்றொரு
முக்கியமான விஷயம் என்னவெனில் இந்தியாவும் இலங்கையும் தங்களின் நோக்கத்தை இழக்கவில்லை என்பதுதான். இந்தச் சிக்கல் எந்தவொரு ஆயுதக் குழுவையோ அதன் தலைவரின் எதிர்காலத்தையோ குறித்த விஷயமல்ல. அது இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்பு, வளம் மற்றும் சட்டரீதியான உரிமைகள் குறித்தது. இந்தியா இதில் தெளிவான பார்வையுடன் இருக்கிறது. உண்மையில் எல்டிடிஇ மட்டுமே இலங்கைத் தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் என்கிறப் பொய்ப் புரளியில் துளிகூட உண்மை இல்லை. இலங்கை அரசு தனது இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் அக்கறை கொண்டுள்ளது. அதன் பாதுகாப்புச் சூழலின் பின்னணியில் இந்தியா இருக்கும் அதேவேளையில், இந்தியநாடு 44 மில்லியன் தமிழ்மக்களின் உணர்வுகளையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.இருநாட்டுத் தலைவர்களும் குறிப்பிடத்தக்க முதிர்ச்சியையும் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தி வந்துள்ளபோதிலும், பூனைக்கு மணி கட்டுவதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்துள்ளது. அதிபர் ராஜபக்சேவின் உடனடிப் பணியாக சீரமைப்புகளை மேற்கொள்வதுடன் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகளுக்கு அவர் தயாராகவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் வெற்றிடத்தில் 1987 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் முக்கியமான பங்கை வகிக்கமுடியும்.

இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறும் சூழலில் 1988 இல் பிரேமதாச இந்திய அமைதிப்படையை திரும்பிப் போகச் சொன்னதும், அப்போது ஏற்பட்ட நெருக்கடியும் தற்செயலானதா அல்லது அரசியல் பின்னணியுள்ளதா என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால் யாராக இருப்பினும் இந்தியாவைப் பகடைக்காயாக வைத்து விளையாட நினைத்தால் அது பேராபத்தில்தான் கொண்டுபோய் விடும்.

[கட்டுரையாளர் கல்கத் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதியும், இந்திய அமைதிப் படையின் தலைமைத் தளபதியும் ஆவார் ]

No comments:

Post a Comment