சக்தி வாய்ந்தவன்எம் தோழன் !
ஈழ மக்களின்,
ஒரு விடுதலை
இயக்கத்தின்
தலைமைத் தோழன்
அவனை
ஆசை ஆசையாக
ரஞ்சன் என்றும்
நாபா என்றும்
எஸ்.ஜி என்றும்
அவரவர் இஷ்டத்துக்கு
அழைத்து மகிழ்வர்.
ஆனாலும்
அவனது பெயர்
பத்மநாபா.
19 வருடங்களுக்கு முன் அது நடந்து முடிந்தது....!
துப்பாக்கிகளை மட்டுமே
நேசிக்கத் தெரிந்த,
மானுட சமூகத்துக்கு
சம்பந்தமில்லாத
பலவற்றைக் கொண்ட
ஒரு தீய சக்தி
நீண்ட காலச்
சதி திட்டத்தோடு
அந்த அழகான
மாலைப் பொழுதை
குருதியால் கறைபடுத்தி
சென்றிருந்தது.
இன்றுவரை எமக்கது
கனவு போலத்தான்
இருக்கிறது.
இதற்காக நாம் யாரும்
ஒப்பாரி வைத்து
அழுது கொண்டிருக்கவில்லை
தமிழகமே திரண்டு வந்து
அஞ்சலி செய்த
அந்த காட்சியே
சாட்சியாகிச் சென்றது,
அவன் ஒரு மனிதனென்றும்
நல்லதொரு தலைவனென்றும்.
கட்சி பேதமின்றி
மனிதர்களை நேசித்தவன்,
தலைவர்களை மதித்தவன்.
அவன் காட்டிய
வழியின் ஒளிக்கீற்று
இன்று மெல்லத் தெரிகிறது
விழிகளை மூடிய இருள்
மெல்லென விலகுகிறது
ஈழ விடியலுக்கான சூழல்
மெல்ல ஒளிர்கிறது.
மரணத்திலும் வாழும்
மானுடன் அவன்
மனிதநேயம் தான்
அவனது
வார்த்தைகளின் பலமே.
"மக்களில்லாத மண்ணை
நாம் நேசிக்கவில்லை
மக்களுக்காகவே
மண்ணை நேசிக்கிறோம்"
என்ற மந்திரச் சொல்லுக்கு
சொந்தக்காரன்
மக்களை கேடயமாக்கி
மரணத்தைப் பரிசளித்த
மந்தைகள் நடுவே
அவன் குரல் கேட்டதா?
இல்லையே...!
இப்போது கேட்கிறது
நன்றாகக் கேட்கிறது
தெளிவாகக் கேட்கிறது.
"காலம்"
ஒரு போதும்
காலை வாரிவிடுவதில்லை
ஒவ்வொரு செயலின்
விளைவுகளையும்
உடனுக்குடன்
காட்டிக் கொண்டிருக்கும்
காலக்கண்ணாடி.
No comments:
Post a Comment