Sunday, June 7, 2009

நட்புக்காக...


தா.பாண்டியன், தமிழ் மாநிலச் செயலாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.

இரு மனிதர்கள் நண்பர்களாக இருப்பது இயல்பானது, நெடுநாள் நண்பர்களாக நீடித்திருந்தால் அது பாராட்டுக்குரியதாகிவிடுகிறது. ஆணும் பெண்ணும் உறவும், நட்பும் கொள்வது இயற்கையின் விதி...

ஆனால், இவற்றைத் தாண்டி இரு நாடுகள் நட்புடன் இருப்பதும், ஒரு நாடு பல நாடுகளுடன் நட்புறவுடன் இருப்பதும் மனிதகுல வரலாற்றில் மிக முக்கியம் வாய்ந்ததாகும்.

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற மிகமிக உயர்வான சிந்தனையை பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட பெருமை தமிழ்நாட்டைச் சாரும். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" என்பதும் நினைத்து நினைத்துப் பாராட்டக்கூடிய சிந்தனை ஆகும்.

இந்தியாவுக்கென்று ஒரு அயல் நாட்டுக் கொள்கை என்பது 1947 க்குப் பின்னர் தோன்றியதுதான். அதற்குமுன் நமது கொள்கையை உருவாக்கும், வெளியிடும் நிலையில் நாம் இல்லை.

இந்தியா சுதந்திர நாடாகப் பிறந்தநாள்தொட்டே, உலக நாடுகளுடன் நல்லுறவு, நட்பு எனத் தொடங்கியது. தொடக்கத்தில் நிறவெறிக் கொள்கையைக் கடைபிடித்த யூதர்களின் இஸ்ரேல் நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. அதேபோல் சீனாவைவிட்டு ஓடிப்போய் அமெரிக்கப் பாதுகாப்புடன் பார்மோசாவில் அரசு அமைத்த சியாங்கே சேக் அரசையும் இந்தியா அங்கீகரிக்கவில்லை. வேறு அரசியல் காரணத்துக்காக ஜெர்மன் ஜனநாயகக் குடியரசையும் அங்கீகரிக்கவில்லை.

இதர நாடுகள் அனைத்துடனும் உறவு பூண்டது. அதில் மூன்று வட்டங்கள் எழுந்தன. புதிதாக விடுதலை பெற்று வளர்ந்த நாடுகள் மூன்றாவது பிரிவாக, இந்தியாவுடன் நெருக்கமாக கூட்டு சேரா நாடுகள் எனப் பெயர் பெற்றன. அதற்கடுத்து சோசலிச முகாம் நின்றது. அதில் சோவியத் யூனியன் மிகமிக நெருக்கமான நண்பனாயிற்று. வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகள் எதிரிகள் அல்ல என்ற வகையில் நட்பு நாடுகளாக இருந்தன.

தொடக்கம் முதலே அமெரிக்கா இந்தியக் கொள்கையை ஏற்கவில்லை. 'என்னுடன் இல்லாதவர்கள் எனக்கு எதிரிகளே' என்ற கோட்பாட்டை அமெரிக்கா அறிவித்தது. அன்றுமுதல் பாகிஸ்தானுக்கு உதவத் தொடங்கியது. காஷ்மீர் சிக்கலில் குழப்பத்தை வளர்த்தது. அது இன்றும் தொடர்கிறது...

இப்போது இந்தியாவின் கொள்கை மாறிவிட்டது.

சோசலிச முகாமும் இல்லாது போய்விட்டது.

கூட்டு சேரா நாடுகள் முன்போல் ஓரணியில் இல்லை.

இந்தியாவின் தலைமை இஸ்ரேல் - அமெரிக்கா - இந்தியா என்ற கூட்டணியைக் கட்ட முயன்று வருகிறது.

நேருவின் கொள்கை பெருமளவில் நொறுக்கப்பட்டு விட்டது.

போதாக்குறைக்கு, உலகமயம் என்ற முதலாளித்துவத் தாக்குதல் மூர்க்கத்தனமாக நடக்கிறது.

இருந்தாலும், இந்தியப் பாரம்பரியமும், வரலாறும், நேரு பதித்த தடங்களும் இன்னும் இந்தியாவின் நட்பு நிலையைக் காத்து வருகின்றன.

எந்தவொரு நாட்டின்மீதும் படையெடுத்துப் பிடித்து அடிமை கொண்ட பழி இந்தியாவுக்கில்லை.

புத்தர், காந்தி போன்ற மகான்கள் அன்பு வழியையே அழுத்திப் புகட்டினர்.

இந்தியா பங்களாதேசத்துக்கு அனுப்பிய படைகூட பதினைந்தாவது நாளே திரும்பிவிட்டது. அடிபணிந்த 90,000 வீரர்களையும் மரியாதையுடன் விடுவித்த பெருமை இந்தியாவுக்கே உரியது.

கட்சி மாற்றம், ஆட்சி மாற்றங்களைக் கடந்து ருஷ்ய - இந்திய நட்பு சற்று பலமாகவே நீடிக்கிறது.

இந்த நட்பு லெனின் விரும்பியதுபோல சீனாவுக்கும் விரிந்தால் அது மனித குலத்துக்கே நன்மை பயக்கும்.

பகைமை மிருகக்குணம். நட்பு மனிதனை மேம்படுத்தும் நற்பண்பு.

எனவே, நட்பை மக்களிடையே வளர்ப்பது நற்பணியாகும்.

No comments:

Post a Comment