Friday, June 19, 2009

பர்மாவில் ஒடுக்குமுறை


டெஸ்மாண்ட் டுட்டு

மெரிக்க அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, எனது மனதில் சில நம்பிக்கைகள் துளிர்த்தன...உலகமெங்குமுள்ள எளிய,ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யும் மனோபாவம் அமெரிக்காவுக்கு ஏற்படக்கூடும் என்று தோன்றியது.

புஷ்ஷின் வெறுக்கத்தக்க கொள்கைகளால் சீரழிந்திருந்த அமெரிக்க நிர்வாகம் ஒபாமாவால் புத்தெழுச்சி பெறும் என்று மகிழ்ந்தேன். குவாண்டனமோ சித்திரவதை முகாம் மூடப்படும் என்கிற அறிவிப்பைத் தொடர்ந்து, உலகளாவிய அமெரிக்காவின் பார்வை மாறக்கூடும் என்று தோன்றியது.

சென்ற வருடம் பர்மாவை சூறாவளி ஒன்று கடுமையாகத் தாக்கியபோது, அங்கு பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக உதவிக்கரங்கள் நீண்டபோது, அந்நாட்டின் ராணுவ அரசாங்கம் அதைப் பெற மறுத்ததை நாம் திகிலுடன் பார்த்துத் திகைத்தோம்.

அந்த பயங்கரமான நாட்களில், அந்நாட்டு அரசாங்கம் மக்களுக்கு உதவுவதைவிட, தனது ஆட்சியை நிரந்தரப்படுத்திக் கொள்வதற்கான அரசியல் திருத்தத்தைச் செய்வதற்காக பொதுஜன வாக்கெடுப்பு என்ற பெயரில் ஒரு திட்டமிடப்பட்ட நாடகத்தை அரங்கேற்றுவதிலேயே முனைப்பாக இருந்தது என்பதை எல்லோரும் கவனித்திருக்க முடியாது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தங்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, பிற பகுதி மக்கள் தங்கள் தலைவிதியை எண்ணி அச்சத்தோடு தவித்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கமோ மக்களை காப்பாற்றுவதைப்பற்றி பொருட்படுத்தாமல், வாக்குச் சாவடிகளுக்கு மக்களை வரச் செய்வதற்க்காக தனது சக்தி முழுவதையும் முடுக்கி விடுவதிலேயே மும்முரமாக இருந்தது.

உண்மையில் அதை வாக்கெடுப்பு என்றே சொல்லமுடியாது. ஏற்கனவே முடிவைத் தீர்மானித்துக் கொண்டு, கண்துடைப்புக்காக நடத்தப்பட்ட ஒரு ஏமாற்று வேலை. தங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள முற்படும் இதயமில்லாத பர்மிய ஆட்சியாளர்களின் நாடகம்.

பர்மாவின் மீதான தனது அணுகுமுறையை தீர்மானிக்கவேண்டிய நிலையில் ஒபாமாவின் தலைமையிலான அமெரிக்கா இருக்கிறது. பொருளாதார ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியோ அலலது சாதுர்யமான நடவடிக்கைகளாலோதான் பர்மாவைக் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்று அண்மையில் அமெரிக்காவின் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் சொன்னதைப்போல, ஒரு தெளிவான பார்வை அமெரிக்காவுக்கு அவசியமாக இருக்கிறது.

பர்மாவுடனான அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும் மிக உறுதியானதாகவும், மிகவும் நோக்கமுடையதாகவும், உலகின் முக்கிய நாடுகளின் பரந்த ஆதரவைப் பெறுவதாகவும் அமையவேண்டும்.

அமெரிக்காவின் திட்டத்தை நாம் எதிர்பார்ப்பதுபோலவே, அமெரிக்காவின் கூட்டாளிகளும், ஐக்கிய நாடுகளின் அமைப்பும், பர்மிய மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பர்மா அரசாங்கம் எதையும் லட்சியம் செய்யவேயில்லை என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.

2010இல் வரப்போகும் பொதுத் தேர்தலை குறிவைத்து ,ஒவ்வொருநாளும் தனக்கு எதிரான சக்திகளை அழித்தொழிக்கவும், தனது பலத்தைப் பெருக்கிக் கொள்ளவும் இராணுவ அரசாங்கம் கண்ணும்கருத்துமாக இருந்து வருகிறது. நல்லாட்சிக்கு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை அலட்சியப்படுத்தும் அரசாங்கம், தனக்கு எதிராக பரவிக்கிடக்கும் அவப்பெயரை நீக்கி, செயல்பாடுகளை முன்னெடுக்கவேண்டும். தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும்.



நோபல் பரிசு பெற்ற சகோதரி, பர்மாவின் ஜனநாயகக் குரலை எதிரொலிக்கும் ஆங் சாங் சூகி இன்னும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு,உலகத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் முடக்கிவைக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

தங்கள் குடும்பத்தாரைக்கூட சந்திக்கமுடியாமல். அடர்ந்த கானகச் சிறைகளில் பத்தாண்டுகளுக்குமேளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தலைவர்கள், புத்த பிக்குகள், கன்யாஸ்திரிகள், பத்திரிகையாளர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் போன்றோரை விடுதலை செய்ய தங்கள் அரசை உலகநாடுகள் வற்புறுத்த வேண்டும் என்கிற குரல்கள் பெருமளவில் கேட்கத் தொடங்கியுள்ளன.இந்த ஒடுக்குமுறை கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. சிறைக்குள் மௌனிகளாக அடைக்கப்பட்டிருக்கும் அவர்களது குரல் வெளியே ஒலிக்கவேண்டும்.

ஒபாமாவின் நிர்வாகம் ஓர் உலகளாவிய அழுத்தி பர்மா மீது ஏற்படுத்தமுடியும் என நான் நம்புகிறேன். பர்மாவின் நல்வாழ்வுக்காக, பர்மியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கவும், பர்மாவின் அண்டைநாடுகள் முயற்சிகள் எடுக்கவும் இது உதவக்கூடும்.

பர்மிய மக்களுக்கு உதவுவதற்காக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் மிகுந்த கவனத்துடனும், கண்காணிப்புடனும் வழங்கப்படவேண்டும். அது ஊழலுக்கோ, பர்மிய மக்கள் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கோ இடமளிப்பதாக அமைந்துவிடக்கூடாது.

அமெரிக்கா பர்மாவுக்கு உதவத்தான் வேண்டும்; ஆனால் சுயநல அடிப்படையில் அது இருக்கக்கூடாது, நமக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால், பர்மாவுக்கு வழங்கப்படும் உதவிகளால் ராணுவ ஆட்சியாளர்கள் மனமாற்றத்துக்குள்ளாவார்கள் என்று நினைத்தால் அது நடக்காது. பிற ராணுவ ஆட்சியாளர்களோடு ஒப்பிட்டோமானால், பர்மீய ஆட்சியாளர்களுக்கு நாட்டின் நன்மை குறித்து சிறிதும் அக்கறை கிடையாது என்றே கூறமுடியும்.

பர்மாவில் அமெரிக்கத் தலையீடு அங்குள்ள இறுக்கமான சூழ்நிலையைத் தளர்த்தி, மக்களுக்கு தங்கள் உரிமைகளை தாங்களே நிலைநாட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமையவேண்டும்.உண்மையில், மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் சரியாகப் போய்ச் சேர்ந்தால்தான், பேச்சுவார்த்தை தொடர்பான நடவடிக்கைகளுக்கு பலன் இருக்கும் என்பதே நமக்குக் கிடைத்துள்ள அனுபவப் பாடமாகும்.

[கட்டுரையாளர் டெஸ்மாண்ட் டுட்டு 1984 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசைவென்றவர்]

No comments:

Post a Comment