Saturday, June 13, 2009

இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் - இஸ்கப் அமைப்பின் சுருக்கமான வரலாறு


1941.ஆதிக்க வெறி கொண்ட ஹிட்லர் சோவியத் நாட்டின்மீது படையெடுத்து அதனுள் ஊடுருவினான். அப்போது உலகம் முழுவதும் சோவியத் ஆதரவு இயக்கங்கள் தோன்றின. இந்தியாவில் அப்போது தொடங்கப்பட்டதுதான் 'சோவியத் நண்பர்கள் சங்கம்' [Friends of Soviet union - FSU].


அதே ஆண்டு டிசம்பரில் கல்கத்தாவில் நடந்த FSU முதல் மாநாட்டுக்கு நேருஜி வாழ்த்து அனுப்பினார். உடல் நலிவுற்று படுக்கையில் இருந்தபோதும் சோவியத் வெற்றிபெறவேண்டும் என்று வாழ்த்தினார் தாகூர். தமிழ்நாட்டில் 'தமிழ் தென்றல்' திரு.வி. தலைமையில் சென்னையில் சோவியத் நண்பர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் பாலதண்டாயுதம் அதன் செயலாளராகப் பொறுப்பேற்றார். மதுரை, கோவை, திருச்சி ,நெல்லை முதலிய பல நகரங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டன. பல மாநாடுகள் நடத்தப்பட்டன.


1945 ஹிட்லர் தோற்றோடினான். மே பத்தாம் நாள் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் சோவியத் கோடி ஏற்றப்பட்டது. உலகம் முழுவதும் வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டன.


சில ஆண்டுகளுக்குப் பின்னர், சோவியத் நண்பர்கள் சங்கம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 'இந்திய் சோவியத் கலாசாரக் கழகம் - இஸ்கஸ் ' என்று அழைக்கப்பட்டது. இந்தப் புதிய வடிவம் 1952 இல் டாக்டர் பாலிகா தலைமையில் பம்பாயில் தொடங்கப்பட்டு, அதன் கிளைகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டன.


தமிழ்நாட்டில் பிரபல திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் தலைமையில் இஸ்கஸ் தொடங்கப்பட்டது. இவர் நாட்டியப் பேரொளி பத்மா சுப்பிரமணியத்தின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் இஸ்கஸ் கிளைகள் தொடங்கப்பட்டன. சென்னை,மதுரை,கோவை முதலிய நகரங்களில் ருஷ்ய மொழி வகுப்புகள் நடத்தப்பட்டன.


1966இல் மோகன் குமாரமங்கலம், சேலம் எஸ்.தாமோதரன், மதுரை சங்கரன் போன்றோரின் முயற்சியால் சென்னையில் மாநில இஸ்கஸ் மாநாடு நடைபெற்றது. பொருளாதார அறிஞர் டாக்டர் நடராசன் தலைவராகவும்,திருமதி கல்யாணி குமாரமங்கலம் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிறகு, 1968 இல் இரண்டாவது மாநில மாநாடு சென்னையில் நடந்தது. தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் இஸ்கசின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


சேலத்தில் 1970 இல் நடந்த மூன்றாவது மாநாட்டில் வழக்கறிஞர் என்.டி.வானமாமலை மாநிலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர், ராஜபாளையம், கும்பகோணம், மதுரை, சென்னை, ஈரோடு முதலிய இடங்களில் அடுத்தடுத்து மாநில மாநாடுகள் நடத்தப்பட்டன.

1972 இல் ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பிரபல கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு தலைவராகவும், அலக் மாநிலச் செயலாளர்களுள் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


காந்தி,நேரு,பாரதி விழாக்களை ஒரு திருவிழாபோல தமிழகமெங்கும் நடத்திய பெருமை இஸ்கசுக்கு உண்டு. சேலத்தில் பாரதி நூற்றாண்டு விழா நடத்தி, பாரதியின் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. இஸ்கஸ் சார்பில் பல மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் ரஷ்யா சென்று படிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர், அவர்களுக்கு கல்வியும் பிற வசதிகளும் இலவசமாக வழங்கப்பட்டன.


1979 அக்டோபரில் 'இஸ்கஸ்' என்ற பெயரில் தமிழ் மாத ஏடு ஒன்று தொடங்கப்பட்டது. என்.டி.வானமாமலை அதன் ஆசிரியர்.


தமிழ்நாட்டு இஸ்கசுக்கும் துருக்மீனிய குடியரசின் நட்புறவுக் கழகத்துக்கும் சிறப்பு சகோதர உறவுகள் ஏற்பட்டன. இதனால் இரு அமைப்புகளும் தூதுக்குழுக்களை அனுப்பி நட்பைப் பரிமாறிக்கொண்டன. 1985 இல் இஸ்கஸ் சார்பில் கன்யாகுமரியிலிருந்து சமாதான யாத்திரை தொடங்கப்பட்டு தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து சென்னை வர, அதேபோல பொள்ளாச்சியிலிருந்தும் ஒரு யாத்திரை தொடக்கி சென்னை வந்து சேர்ந்தது. ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் , உலக சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத் தலைவர் ரொமேஷ் சந்திரா ஆகியோர் வரவேற்றனர்.


1991இல் சோவியத் நாடு சிதறுண்டபிறகு, சிறிதுகாலம் இஸ்கஸ் அமைப்பு தேக்க நிலையை அடைந்தது. இயக்கத்தின் அமைப்பை மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டதால், 1993 பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற மாநாட்டில் இஸ்கஸ் பெயர் மாற்றம் பெற்று 'இஸ்கப்' [இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் - INDIAN SOCIETY FOR CULTURAL CO OPERATION AND FRIENDSHIP ] உருவானது. அடுத்த அகில இந்திய மாநாடுகள் ஜெய்பூரிலும் , கட்டாக்கிலும் நடந்தன.


நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அகில இந்திய கௌரவத் தலைவராக இந்த அமைப்பை வழிநடத்தி வருகிறார். அகில இந்தியத் தலைவர்களாக ராஜ்குமார், ரொமேஷ் சந்திரா, நீதியரசர்கள் எஸ்.எஸ்.காங், ஜீவன் ரெட்டி, செயலாளராக கன்ஷ்யாம் பட்நாயக் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்துவரும் இந்திய ரஷ்யா நட்புறவை மெம்மேலும் பலப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுவரும் இஸ்கப் பிற நாடுகளுடனும் நட்புறவைப் பேணி உலக சகோதரத்துவத்துக்கான முன்முயற்சிகளில் தன்னை முழுதுமாக அர்ப்பணித்துள்ளது.


தோழர் ஜெயகாந்தன், தோழர் தங்கப்பன் ஆகியோரின் தலைமையைத் தொடர்ந்து, தற்போது கவிப்பேரரசு வைரமுத்து மாநிலத் தலைவராகவும், வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணன் மாநிலப் பொதுச் செயலாளராகவும், திருமதி ஜானகி கிருஷ்ணன், முனைவர் எல்.அசோக்குமார் துணைப் பொதுச் செயலாளர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.


நாடுகளுக்கிடையேயான கலாச்சார,பண்பாட்டுப் பரிவர்த்தனைகளுடன் நட்புறவைப் பேணி வளர்ப்பது இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் ஒரு தலையாய சமூகக் கடமை ஆகும். அதை முனைப்புடன் நிறைவேற்றிவரும் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் உங்களையும் இந்தப் பணியில் இணைத்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறது.

தொடர்புக்கு...


பொதுச் செயலாளர், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம்,

94, கிரே டவுன், கோயம்புத்தூர் - 641 018.

தொலைபேசி : 944 32 94 260 / O422 230 3070


இந்திய கலாசார நட்புறவுக் கழகம், தமிழ் மாநிலக் குழு,

79/32, ரம்யா அபார்ட்மென்ட்,பிளாட் எண். 4B, நான்காவது முக்கிய சாலை,

காந்தி நகர், அடையாறு, சென்னை 600 020.

தொலைபேசி 044 42114512.

No comments:

Post a Comment