Monday, June 1, 2009

ராஜம் கிருஷ்ணனின் படைப்புகள் நாட்டுடைமை

ராஜம் கிருஷ்ணன் மூத்த தமிழ் எழுத்தாளர், 1925 -இல் திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்து, காவிரி நதியில் விளையாடிய அவர் முறையான கல்வியை பயிலாதவர். 15 வயதிலேயே கிருஷ்ணன் என்பவரை மணந்து விட்டார். மின் பொறியாளரான கணவரின் உதவியால் பல புத்தகங்களைப் படித்து, பின் தானே பல கதைகள், கட்டுரைகளை தமிழுக்கு தந்தவர்.


இவரின்
80 க்கும் மேற்பட்ட படைப்புகள் தமிழ்ப் புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவரின் 59 தொகுதிகள் அமெரிக்க நூலகத்தில் கிடைக்கபெறுகின்றன.

பெண்ணியம் பற்றி அந்த காலத்தில் இருந்த நிலை பற்றி, படுகர்கள் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய கடும் பிராயணங்களை மேற்கொண்டு முயற்சிகள் செய்தவர். செக்கொஸ்லொவோக்கியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்தவர்.

1950 -லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் ட்ரிபியுனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத் தான் இருக்கும்.

1970 ம் ஆண்டு தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு 'கரிப்பு மண்கள்' என்ற நாவலை எழுத்தினார். பீகார் கொள்ளைக் கூட்டத் தலைவன் 'பாகுமான்சி' யை சந்தித்ததன் விளைவாக 'முள்ளும் மலரும்' என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை முதலிய பல்வேறு சமூக அவலங்களைப் பற்றி எழிதியவர்.

1973 - ம் ஆண்டு உப்பள மக்களின் வாழ்கையின் அடிப்படையில் இவர் எழுதிய 'வேருக்கு நீர்' தான் இவருக்கு 'சாஹித்ய அகாடமி' விருதைப் பெற்றுத் தந்தது.

இடது சாரி சிந்தனையுடைய இவர் மக்களின் யதார்த்த வாழ்கையை பற்றி முற்போக்கான 50 க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகளை தமிழுக்கு தந்தவர். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் (NFIW) தமிழகத் தலைவராக பணியாற்றி பெண்ணியத்திற்காக குரல் கொடுத்தவர். இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் (ISCUF) பல்வேறு செயல்பாடுகளில் இவரது பங்கும் உண்டு.

'கூட்டுக் குஞ்சுகள்', 'வனதேவியின் மைந்தர்கள்', 'உத்திரகாண்டம்', 'உயிர் விளையும் நிலங்கள்', 'புதியதோர் உலகம் செய்வோம்', 'பெண் விடுதலை', 'கரிப்பு மணிகள்', 'சத்திய தரிசனம்', கூடுகள் ஆகியவை இவரது படைப்புகளில் சிலவாகும். குறிப்பாக இலங்கைத் தமிழர்களைப் பற்றி இவர் எழுதிய 'மாணிக்க கங்கை' என்ற நூல் இலங்கை தமிழர்கள் மத்தியில் பிரபலமானது.


இன்றைக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதையின் களத்தைப் பற்றிய அறிவு கூட இல்லாமல் தான் எழுதுகிறார்கள். எல்லாம் வரட்டுக் கற்பனை. இவர்களுக்கு சினிமா, சினிமா பாடல்கள் தான் வாழ்க்கை, இலக்கியம் என்றாகிவிட்டது. யாருக்கும் மக்களைப் பற்றிய அக்கறையோ, குறைந்தபட்சம் அவர்களின் உலகத்தை எட்டிப் பார்க்கும் ஆவலோ கூட கிடையாது.


இப்படி பட்டவர்களுக்கு மத்தியில், நியூயார்க் ஹெரால்ட் ட்ரைப்யூன் சர்வதேச விருது, கலைமகள் விருது, சாகித்ய அகாடமி விருது, சோவியத் லான்ட் நேரு விருது, திரு.வி. விருது போன்ற பல விருதுகளுக்கு சொந்தக்காரரான 85 வயதுடைய இவர் இன்று எந்த சொந்தமும், பாதுகாப்பும், உதவியும் இல்லாமல் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இலவச நோயாளிகள் பிரிவில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். அங்கு அவரோடு தங்கியிருக்கும் சக நோயாளிகளும் அவர்களது பராமரிப்பாளர்களும், தாதியர்களும் தான் அவரது இன்றைய உறவுகள். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) பொதுச் செயலாளர் தோழர்.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களுடன் ISCUF சென்னை மாவட்டச் செயலாளர் கமலாகரன்(குகன்), துணைச் செயலாளர் ரதன் சந்திரசேகர், பொருளாளர் அனிதா காயத்ரி, மாநிலக் குழு உறுப்பினர் கேசவராஜ் ஆகியோர் சமீபத்தில் மருத்துவமனையில் ராஜம் கிருஷ்ணனை சந்தித்து உரையாடிய போது, தனது இலங்கை தொடர்புகளை நினைவு கூர்ந்தார்.

இப்போது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளை நாட்டுடைமையக்குவதாக அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்த இலக்கியப் படைப்பாளிக்கு மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment