இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடிய போராளிகளுள் இபிஆர்எல்எப் பத்மனாபாவுக்குத் தனி இடம் உண்டு... எல்லாவற்றுக்கும் மேலாக அவர் இந்தியாவின் மிகச் சிறந்த நண்பராக விளங்கினார். தன வாழ்நாள் முழுமையும் தமிழ் மக்களுக்காக வாழ்ந்த இளம்போராளி என்றும், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க முடியாதது இந்தியாவுக்கு தேசிய அவமானம் என்றும் ராஜிவ்காந்தி கூறியதிலிருந்து அவரது முக்கியத்துவம் புரியவரும். இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கட்சி வேறுபாடின்றி அவரை நேசித்தனர். சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பத்மநாபாவின் நினைவுநாள் வரும் ஜூன் 19. இந்திய கலாசார நட்புறவுக் கழகத்துடன் நெருங்கிய உறவு பூண்டிருந்த அவரைப்பற்றி நமது இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த அமரர் என்.டி.வானமாமலை எழுதிய ஒரு கட்டுரையை இங்கு பத்மநாபா நினைவாக வெளியிடுகிறோம்....
இலட்சியங்கள் அழியாது...
உலகளாவிய பார்வை கொண்ட பத்மநாபா பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டார். லெபனான் போர்க்க்களத்தில் யூதர்களிடையே ஏகாதிபத்தியப் போக்கையும், வெறித்தனத்தையும் வளர்க்கும் சியோனிசவாதிகளுக்கு எதிராக போர் புரிவதில் அவர் ஈடுபட்டிருந்தார். அக்காலத்தில் ஈழப் புரட்சி அமைப்பை [eros] அவர் சார்ந்திருந்தார். ஈரோசின் தலைமையின்மீது மதிப்பிழந்த அதன் உறுப்பினர்கள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை - EPRLF - அமைத்த காலத்தில் அதன் தலைமைச் செயலாளராக பத்மநாபா தேர்ந்தெடுக்கப்பட்டார். தன கடைசி மூச்சுவரை பத்மநாபா அப்பொறுப்பை வகித்தார்.
ஈழ மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அயராது பாடுபட்டார். மீனவர்கள், விவசாயிகள், மாணவர்கள், அறிஞர்கள் அனைவரையும் ஈர்த்து இணைக்கும் இயக்கமாக விடுதலை இயக்கம் திகழவேண்டும் என்பது அவரது இலட்சிய நோக்கம். தமிழ் மக்கள் - முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்றிணைத்து இருக்கவேண்டும் என்பதில் அவர் அக்கறை காட்டினார்.
ஈழமக்களுக்கு எதிரான கொடுங்கோன்மையை எதிர்த்த பத்மநாபா, சிங்கள எதிர்ப்பு வெறிக்கு இடங்கொடுக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. சிங்கள மக்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கைகளை அவர் வன்மையாகக் கண்டித்தார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கென்று ஒரு ஆட்சி ஏற்பட்டபோது, பத்மநாபா முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்தது அவர் இலட்சிய உறுதியை தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியது. பதவிகளை ஏற்கும் பொறுப்பை தனது சகாக்களுக்கு அளித்தார்.
பத்மநாபாவின் பரந்த நோக்கும், மக்களை எதிர்நோக்கிய பயங்கரப் பிரச்சனைகளை தீர்ப்பதில் அவருக்கு இருந்த தணியாத ஆர்வமும், எல்லாவற்றிற்கும் மேலாக பதவியைப் புறக்கணித்ததும் பாரத சுதந்திர இயக்கத்தின் தந்தை மகாத்மா காந்தியை நினைவுபடுத்துகின்றது.
காந்தி பிறந்த தேசத்தில், காந்தி மாண்ட முறையிலேயே குண்டுகளுக்கு இரையாகி தன லட்சியத் துணைவர்கள் பன்னிருவருடன் உயிர் துறந்தார் பத்மநாபா.
நாற்பது ஆண்டைக்கூட எட்டிப் பிடிக்காத பத்மநாபா மரணமடைவதற்கு ஒரு வருடத்துக்கு முன்தான் தான் காதலித்த ஆனந்தியை மணந்தார், அவரையும், அவரோடு தோளுடன் தோள்நின்ற நிராயுதபாணிகளான இளம் இயக்கத் தலைவர்களையும் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற கொலைபாதகர்களையும், அவர்களைத் தூண்டியவர்களையும் வரலாறு மன்னிக்கவே முடியாது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபாவுக்கு அஞ்சலி செலுத்த வெளியிட்டுள்ள சிறு வெளியீட்டில், 'எமது பிரதான எதிரிகள் விடுதலைப் புலிகள் அல்ல, சிங்களப் பேரினவாத அரசுதான் என வலியுறுத்திய பத்மநாபா புலிகளைக்கூட ஐக்கியப்பட்டுப் போராட அழைத்தார்.' எனக் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், சுதந்திர நல்வாழ்விற்கான போராட்டத்தில் அனைவரையும் ஒன்றுபடுத்துவது அவசியம். தவறான பாதையைப் பின்பற்றுவோர் பின்னாலும் பெரும்பகுதி மக்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்கலாகாது. அத்தகைய இயக்கத்தினரையும் ஒன்றிணைத்து, தவறுகளைப் போக்கி முன்னேறும் மார்க்கம் காண்பதே வெற்றி வாகை சூடுவதற்கான பாதை.
பத்மநாபாவின் இலட்சியங்கள் அழியவே அழியாது.

No comments:
Post a Comment