Sunday, June 7, 2009

இளைஞனே உன்னிடம் சில வார்த்தைகள்...


கவிப்பேரரசு வைரமுத்து, மாநிலத் தலைவர், இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம்.

இளைஞனே வா ...

உன்னிடம் சில வார்த்தை பேசவேண்டும் சிநேகத்துடன்.

ரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப்போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்.

எதார்த்தத்தைவிட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.

மயில் தோகைகளைப் பரப்பி மல்லிகைப்பூ தெளித்த சாலை உனது கனவாக இருக்கிறது. ஆனால், காலில் ஆணி அடித்துக்கொண்டு முட்களின்மீது நடப்பதுதான் உனது எதார்த்தமாக இருக்கிறது.

நாளையின் நம்பிக்கைச்சுடர் நீதான் என்று உன்னை போலி வார்த்தைகளால் புகழமாட்டேன். எனென்றால்- எரிந்து கொண்டிருப்பவனே நீதானே...?

உனக்கும் உன் பெற்றோருக்கும் உறவு சரியில்லை. உனக்கும் உன் ஆசிரியருக்கும் உறவு சுகமில்லை. ஒரு கிழவியைக் கல்யாணம் செய்து வைத்த மாதிரி கல்வி உனக்கு கசப்பாக இருக்கிறது.

உன்னைப் பயன்படுத்தும் அரசியல் தலைவர்கள் இருக்கிறார்களே தவிர - உனக்குப் பயன்படும் சமூகத் தலைவர்கள் இல்லை.

உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம்; முகத்துக்கு முன்னால் இருட்டு.

கண்பார்வை உனக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துக்கொள்ளக்கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் தரவில்லை. ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய், சாவி கொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் இருந்தால் அடுத்தத் தலைமுறை நகராத கூவமாய் நசிந்துவிடும்.

எங்கே போகிறோம் இளைஞர்களே...

இலட்சியம் இல்லாத வாழ்க்கை ஆணியில் தொங்குகிற சட்டை மாதிரி உள்ளீடற்றுத் தள்ளாடுகிறது. இந்திய இளைஞனே... இன்று உனது இலட்சியம் என்ன? காற்றின்போக்கில் பறக்கும் காகிதமாய் நம்மில் பலருக்கு இலக்கு என்ன என்பது தீர்மானமாகாமலேயே இருக்கிறது.பல நேரங்களில் அதை நாம் தீர்மானிப்பதென்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது.

எனவே நம் இளைஞர்கள் பலருக்கு இருக்கும்வரைக்கும் சுவாசிப்பதே இலட்சியமாய் இருக்கிறது. அல்லது சுவாசிக்க முடிந்தவரைக்கும் இருப்பதே இலட்சியமாய் இருக்கிறது.

இளைஞனே... உனது இலட்சியம் ஒரு கிலோமீட்டர் தூரத்தில்கூட இருக்கலாம். அல்லது, சூரியமண்டலத்தைப்போல், தொட முடியாத தூரத்திலும் இருக்கலாம்.

ஆனால், ஏதாவதொன்று இருக்கட்டும்.

கழுதையில் சவாரி செய்கிறவன் கழுதையின் வாயருகில் கேரட்டைக் காட்டிக்கொண்டே போவதைப்போல, உன் இலட்சியத்தைக் காட்டிக் கொண்டே உன்னை நீ வழி நடத்து.

உனது இலட்சியம் என்று நீ கொடு கிழித்துக் கூறுவது எதை?

மருத்துவராவது - பொறியியல் வல்லுனராவது - ஆசிரியராவது - எழுத்தாளராவது - ஓவியராவது - தனித் தொழில் தொடங்குவது இவை போன்ற ஆசைகளுக்கெல்லாம் நீ இலட்சியங்கள் என்று நாமகரணங்கள் சூட்டிக்கொள்ளக்கூடாது.

இவைஎல்லாம் இலட்சியங்கள் அல்ல ; நீ தேர்ந்தெடுக்கும் துறைகள் . அவ்வளவுதான்.

இந்தத் துறையில் வாழ நினைப்பது உன் விருப்பம்.

இந்தத் துறையை நீ வாழ வைப்பது உன் இலட்சியம்.

நீ ஈடுபடும் துறையில் உன் பெயர் சொல்லும் முத்திரை என்ன? குறைந்தபட்சம் உனது இலட்சியம் என்பது அதுதான்.

நம்மில் பலர் ஒரு நாற்காலி கிடைக்கும்வரைக்கும் தீயைப்போல் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். கிடைத்தபிறகோ அந்த நாற்காலி போல விறைத்துப்போகிறார்கள்.

நம்முடைய அகராதியில்-

ஆசிரியன் என்பவன் கற்பதை நிறுத்திவிட்டவன்.

அரசாங்க ஊழியன் என்பவன் ஒன்றாம் தேதி மட்டும் உறங்காதவன்.

மருத்துவன் என்பவன் தும்மிக் கொண்டே ஜலதோஷத்துக்கு மருந்து கொடுப்பவன்.

இந்த நிலை மாற வேண்டாமா?

பதவி உயர்வை 'டேட் ஆப் பர்த் ' மட்டுமே தீர்மானிக்கும் என்பதனால், இளைஞர்களுக்கெல்லாம்கூட சோகத்தால் சோகை பிடித்து விடுகிறது.

இளைஞனே, உனது இலட்சியம் என்பது வெறும் பதவி மட்டுமல்ல; அதற்கும் மேலே.

அந்த இலட்சியத்தை ஏற்படுத்திக் கொள்.


No comments:

Post a Comment