Tuesday, July 7, 2009

ரஷ்யாவில் ஒபாமா


இது ஒரு வரலாற்று நிகழ்வுதான். ஏகாதிபத்தியம் என்று அச்சக் கண்களுடன் உலகத்தால் பார்க்கப்பட்ட அமெரிக்க நாட்டின் தலைவர் ஒருவர், புரட்சிகர பூமி என்று வர்ணிக்கப்பட்ட ரஷ்ய நாட்டில் கால் பதித்து ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆகின்றன.

சோஷலிச நாடான சோவியத் தேசம் சிதைந்தபிறகு, உலகத்தின் ஆதிக்க சக்தியாக இனி அமெரிக்க மட்டுமே இருக்க முடியும்; அதன் காலடியின்கீழ் ஜனநாயகம் சிக்கித் திணறும் என்றெல்லாம் சோவியத் சார்பு நாடுகளும், நடுநிலை நாடுகளும், வளரும் நாடுகளும் அச்சமுற்று இருந்த நிலை மாறிப் போனது.

பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவித்த அமெரிக்க நிர்வாகம் தனது கொள்கைகளை பரிசீலனை செய்யவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அதன் தவறான இராணுவ நிலைப்பாடுகளுக்கு சொந்த மக்களிடம் பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது. அமெரிக்க மக்களிடையே தமது நாட்டின் அதிகாரத் தோரணை குறித்த எதிர்மறை கேள்விகள் எழும்பின. அடுத்த நாட்டைச் சுரண்டி தனது மாநிலத்தைச் சிறக்க வைக்கும் அமெரிக்காவின் பொருளாதாரக் கோட்பாடுகளின் மீது கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டன. இந்த சலசலப்பு அமெரிக்க அரசியலிலும் எதிரொலித்தது.

சி ஐ ஏ-வின் கோரமுகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் அமெரிக்கத் தலைவர்களின் நடுவே ஒரு வித்தியாச முகமாக பராக் ஒபாமாவின் முகம் அமெரிக்க அரசியல் அரங்கில் தென்பட்டது. அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கே ஓர் எதிர்பார்ப்பைத் தூண்டும் - நல்லெண்ணத்தைத் தோற்றுவிக்கும் அமெரிக்கத் தலைவராக அவர் தெரிந்தார். அவர் தேர்தல் களத்தில் முன்வைத்த கோஷங்களும், அவரது அறிவிப்புகளும் அவர் மீது பெரும் நம்பிக்கைகளை உருவாக்கின. அவரது அரசியல் எதிரிகளோ அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்றும், ஒரு முஸ்லிம் என்றும் சித்திரித்து பிரச்சாரம் செய்ய முற்பட்டபோது, அவர் மீதான நம்பிக்கை மேலும் வலுப் பெற்றது. ஒபாமா மாபெரும் வெற்றியைப் பெற்று அமெரிக்காவின் தலைவர் ஆனார்.

அதிகாரம் கைக்கு வந்தவுடன், அவர் தொடுத்த தாக்குதல் அமெரிக்காவின் இராணுவ நிலைப்பாட்டை குறி வைத்தது. இராக் மீதான அமெரிக்கத் தாக்குதலை தேர்தலின்போதே வன்மையாகக் கண்டித்திருந்த ஒபாமா, ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்கப் படைகளை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். காலம் காலமாய் அமெரிக்கா வன்மத்துடன் பார்த்த லத்தீன் அமெரிக்க நாடுகளின்மேல் ஒபாமாவின் பார்வை கனிவுடன் இருந்தது. அமெரிக்கா தனது சம எதிரியாய் பாவித்த ரஷ்யநாட்டின் மீதும் நட்புறவுக் கரத்தை நீட்ட ஒபாமா தயங்கவில்லை.

அந்த நல்லுறவின் அடுத்த நிகழ்வாக, முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஒரு அமெரிக்க அதிபர், பராக் ஒபாமா ரஷ்யநாட்டில் காலடி வைத்த அந்த இனிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவை சந்தித்துக் கை குலுக்கியுள்ள ஒபாமா, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் ரஷ்யாவுடன் தொடர்ந்து இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

இனி எல்லாம் சுபமே என்று மங்களம் பாடிவிடமுடியாதுதான். அமெரிக்க நாட்டின் ஒரு தலைவர் மீது அல்ல, ஒபாமா என்கிற தனி மனிதனின் மீது இருக்கிற நல்லெண்ணமும், நம்பிக்கையும் மட்டுமே நம்மை இந்த அளவுக்கு மகிழ்வு கொள்ள வைத்திருக்கிறது என்பதும் உண்மை.

ஏனென்றால் அமெரிக்காவின் முகம் வேறு என்றோ, அதன் குணம் மாறும் என்றோ நம்மால் உறுதியான நம்பிக்கை கொள்ளும் காலம் இன்னும் கனிந்து வரவில்லை. காரணம், சொந்த மக்களின் இரத்தத்தில் முத்துக் குளித்து உருவான அமெரிக்க நாடு, தொடர்ந்து அதன் கரங்களை இரத்தக் கறை படிந்ததாகவே வைத்து வந்திருக்கிறது. அமெரிக்கா என்றதும் அதன் சுதந்தர தேவி சிலை நினைவுக்கு வரும் முன்பே, சி ஐ ஏ என்ற பெயர்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. உலகமெங்கும் அது நடத்திய அட்டகாசங்களும், ஆட்சிக்கவிழ்ப்புகளும், இரக்கமற்ற படுகொலைகளும் வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் எழுதப்பட இரத்த எழுத்துகள்.

அதை மாற்ற முடியுமா இந்த தலைவனால்? சி ஐ ஏ என்ற நச்சு வட்டத்தை உடைத்து, மனிதநேயம், சமாதானம், சகவாழ்வு என்ற மலர்ச் சரத்தை உலக நாடுகளிடையே பிணைக்க வைக்க முடியுமா ஒபாமாவால்? ஒரு வரலாற்றுத் தலைவனாக வடிவெடுக்க முடியுமா அவரால்?

ஒபாமாவின் பாதையினூடே நமது கேள்விகளும் பயணிக்கின்றன.. .

ரஞ்சனி சுகுமாரன்

No comments:

Post a Comment