Friday, July 24, 2009

அற்புதக் கலைஞன் அப்பாஸ் கிராஸ்தமி


வா
ழ்வை நமக்கு நெருக்கமாக காட்டுகிற சினிமாக்கள் ஈரானிய திரைப்படங்கள். இஸ்லாமிய புரட்சிக்கு பின் மிக கடுமையான தணிக்கை முறையிலிருந்து வெற்றி பெறுவது அவ்வளவு லேசான காரியமில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக மிகையில்லை. இன்று அதி உன்னத நிலையை ஈரானிய திரைப்படங்கள் அடைந்ததற்கு மிக முக்கியமாக காரணிகளில் ஒருவர் தான் அப்பாஸ் கிராஸ்தமி. உலக சினிமா ரசிகர்களை ஈரானிய சினிமாக்களின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்களுள் முக்கியமானவர்.

1940ம் வருடம் ஜீன் 22ம் தேதி டெஹ்ரானில் பிறந்தார். சிறுவயது முதலே ஓவியத்திலும் கலையிலும் அவருக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. அந்த விருப்பத்தின் பேரில் டெஹ்ரான் பல்கலைகழகத்தில் கலையும் ஓவியமும் பயின்றார்.

பெரும் வாழ்க்கை போராட்டத்திற்கு பிறகு விளம்பர படங்கள் எடுக்கும் வாய்ப்பும் கிட்டியது. 1962 முதல் 1966 வரை நான்கு ஆண்டுகள் இரானிய தொலைகாட்சிக்காக சுமார் 150க்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கினார். 1969ல் கிராஸ்மிக்கு பர்வீன் என்ற பெண்ணுடன் திருமணமானது. அஹ்மத் கிராஸ்மி, பாஹ்மான் கிராஸ்மி என்ற இரு மகன்கள் உள்ளனர்.

1979 புரட்சிக்கு பிறகு பெரும்பாலான கலைஞர்கள் ஈரானை விட்டு வெளியேறி மேற்கத்திய நாடுகளில் குடியேறினர். ஆனால் கிராஸ்தமி தன் சொந்த மண்ணை விட்டு செல்பவன் ஒரு கலைஞனாக இருக்க முடியாது என்ற எண்ணத்தில் ஈரானிலேயே வாழ்ந்து வந்தார்.

The Bread and Alley இவர் 1970ம் ஆண்டு இயக்கிய முதல் கறுப்பு வெள்ளை குறும்படம். ஒரு சிறுவன் ரொட்டி துண்டுடன் வீடு செல்லும் போது பசியுடன் துரத்தும் ஒரு நாயை பற்றியது. பத்தே நிமிடங்களில் ஒடகூடிய இக்குறும்படத்தின் மூலம் தான் யார் என்பதை தானே அறிமுகப்படுத்தி கொண்டார்.

The Experience [1973 குறும்படத்தையும் இயக்கினார். இதில் அவர் அவ்வளவாக திருப்தியடையவில்லை. இன்னும் கடுமையாக முயற்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவரின் மனதை உறுத்தி கொண்டு இருந்தது.

1974ல் வெளியான The Traveller திரைபடத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஆனால் இது 71 நிமிடங்களில் ஒரு முழு நீள திரைப்படமாயிற்று. ஈரானிய தேசிய கால்பந்தாட்டத்தை காண ஆவலுடன் துடிக்கும் ஒரு பத்து வயது சிறுவனின் வாழ்வியல் நிகழ்ச்சிகளையும் உள்ளுணர்வுகளையும் சித்தரிக்கும் காவியம். ஒரு விருப்பத்தின் அல்லது அதீத ஆசையின் காரணமாக பதின்ம வயது மனதுக்குள் ஏற்படும் விபரீத எண்ணங்களை சித்தரிக்கும் படமாக அமைந்து அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியதோடு ஈரானிய சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த ஒரு அற்புத திரைப்படம்.

So Can I , Two solutions for one problem, A wedding Suit ஆகிய படங்களையும் 1975களில் இயக்கினார்.

அபபாஸ் கிராஸ்தமியின் முதல் திரைப்டம் என்று 1977ல் வெளியான The Report திரைப்படத்தை சொல்லலாம். இத்திரைப்படம் 112 நிமிடங்களில் முடிவடைவதாக எடுக்கப்பட்டது. வரி வசூல் செய்யும் ஒருவன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கையூட்டு பெற முற்படுவதும் பின்னர் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயலுவதின் பின்னணியில் பின்னப்பட்ட ஒர் அற்புத நிகழ்வுகள் நிறைந்த திரைப்படம்.

மற்றும் ஒரு பெருமையும் இத்திரைப்படத்திற்கு உண்டு. இத்திரைப்படத்தில் இருபது வயது இளம் பெண்ணாக இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை Shohreh Aghdashloo. இவர் தனது 54 வயதிலும் இன்று வரை அமெரிக்க தொலைகாட்சிகளிலும் ஹாலிவுட்டில் நடிப்பது மட்டுமல்லாது ஆஸ்கருக்கும் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஈரானிய நடிகை.

முழுநீள திரைப்படங்களை இயக்கினாலும் குறும்படங்களில் மீதான காதல் இவருக்கு எப்போதும் உண்டு. 1980களிலும் நிறைய குறும்படங்களை இயக்கினார்.

ஈரானை விட்டு வெளியேயும் இவரின் புகழ் பரவ காரணமானது Where Is the Friend's Home? இத்திரைப்படம் 1987ல் வெளியானது.

உலக அளவில் பேசப்பட்ட இத்திரைப்படம் ஸ்விஸ் திரைப்பட விழாவில் வெண்கல சிறுத்தை பரிசை பெற்றதோடு டெஹ்ரான் திரைப்பட விழாவில் தங்க பரிசையும் வென்றது.

30,000 மக்களை கொன்று தன் அகோர பசியை தீர்த்து கொண்ட 1990 ஈரானிய கடும் பூகம்பத்தில் பெரிதும் பாதிக்கபட்டார். தன் முந்தைய திரைப்படத்தில் நடித்த மக்களை தேடி புறப்பட்டு அதை ஒரு திரைப்படமாக்கினார். அதுவே 1991ல் வெளியான Life, and Nothing More... இது ஒரு ஆவணப்படம் போன்றும் எடுக்கப்பட்டது. ஆனால் டாக்குமெண்ட்ரிக்குரிய வறட்டுதனம் சிறிதும் இல்லாமல் இருப்பது ஒரு ஆச்சரியமே.

1994ல் Through the Olive Trees என்ற திரைப்படத்தை எழுதி இயக்கினார். கட்டிட வேலை செய்யும் ஒருவனை திரைப்பட நாயகனாக்கும் முயற்ச்சி பற்றிய கதை. இதுவும் கிராமிய பின்னணியில் எடுக்கப்பட்டதுடன் இதில் ஊடே ஒரு காதல் கதையும் உண்டு.

இந்த மூன்று திரைப்படங்களும் ஈரானிய மிகச்சிறிய கிராமமான கோக்கர் என்ற சிற்றூரில் எடுக்கப்ப்ட்டதால் இவை Koker trilogy என்று சினிமா ஆர்வலர்களால் ஆர்பரிக்கப்பட்டது.

இந்த Koker trilogy என்ற சொல்லபடுகின்ற திரைப்டங்கள் வெற்றி பெறாத இடங்களே இல்லை. பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன் ம்ற்றும் பின்லாந்து ஆகிய அனைத்து நாடுகளின் திரை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியது.

வால்ட் டிஸ்னியின் திரைப்பட வெளியீடும் நிறுவனமான Miramax Films நிறுவனம் இத்திரைப்டங்களை அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகமெங்கும் வெளியிட்டு அப்பாஸ் கிராஸ்தமிக்கு ஒரு மிகப்பெரிய சிவம்பு கம்பளத்தை விரித்து கொடுத்தது.

தனது துணை இயக்குநர் Jafar Panahi க்காக திரைக்கதை எழுதி அவரை இயக்கவும் வைத்த பெருமையும் உண்டு அப்பாஸ் கிராஸ்மிக்கு.

பல திறமையான இயக்குநர்களை கண்டறிந்து அவர்களுக்காக சில திரைபடங்களையும் தயாரித்து சிறந்த திரைப்பட தயாரிபாளருமானார்.

மீண்டும் 1997ல் The Taste of Cherry என்ற திரைபடத்தை தயாரித்து இயக்கவும் செய்தார். இந்த திரைப்படமும் அப்பாஸ் கிராஸ்தமியின் மற்ற படங்கள் போலவே பெரிய கதையம்சம் கொண்டதில்லை. இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தங்க பரிசை தட்டி சென்றது.

1999ல் வெளியானது The Wind Will Carry Us.

2002ல் இயக்கிய Ten திரைப்படம் முற்றிலும் வேறுபட்ட வகையில் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம். ஒரு காரின் பயணத்தில் தொடங்கி காரிலேயே முடிவடையும் திரைப்படம்.

இதற்கிடையே 2001ல் ஐக்கிய நாடுகளின் International Fund for Agricultural Development என்ற அமைப்பு உகாண்டா நாடுகளின் ஆதரவற்ற எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றிய ஆவண படமெடுக்க அப்பாஸ் கிராஸ்தமியை தேர்வு செய்தது.

இம்முறை ஈரானுக்கு வெளியே சென்று ABC Africa ஒரு மிகச்சிறந்த ஆவண படத்தை இயக்கி தந்தார். இம்முறையும் குழந்தைகளுடன் பணி புரிய எனக்கு கிடைத்த அரிய சந்தர்பம் என்று நினைவு கூறுகிறார் அப்பாஸ்.

2004ல் மீண்டும் Ten on Ten என்ற ஆவணபடத்தையும் இயக்கினார். இது தனது முந்தைய திரைப்படமான 2002ல் உருவாக்கிய Ten உருவாக்கப்பட்ட விதத்தையும் விவரிக்கிறது. Tickets 2005ல் வெளியான நகைச்சுவை கலந்த திரைப்படம். நாம் அன்றாட பயணிக்கும் பொது போக்குவரத்தான பேருந்துகளிலும் தினசரி சாலைகளில் சந்திக்கும் முன் பின் தெரியாத நபர்களின் ஊடே நடக்கும் சிறு சிறு சம்பவங்களின் தொகுப்பு. இவரின் குறும்பட ஆசை தணியாது போலும். 32 நிமிடங்கள் ஒடும் The Roads of Kiarostami என்ற குறும்படத்தை 2006ல் இயக்கியுள்ளார். இதுவரை இயக்கிய திரைபடங்களில் எதிலும் இல்லாத ஒரு புதுமையை கையாண்டு 2008ம் ஆண்டு Shirin என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். 114 இரானிய நாடக மற்றும் திரைகலைஞர்களுடன் பிரான்ஸ் நடிகை Juliette Binoche யுடன் இணைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

800 ஆண்டுகளுக்கு முந்தைய பெர்சிய காதல் கதையை இவர்கள் பார்ப்பது போலவும் அதனால் அவர்கள் மனதில் ஏற்படும் எண்ணங்களை வெளிப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளோசப் காட்சிகளை மட்டுமே கொண்ட திரைபப்டமாகும். இதுவரை 65வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.

இவரின் திரைப்பயணம் இன்னும் தொடர்கிறது. வாழ்வியலோடு இணைந்து வாழ்வின் மெய்மையை கண்டடையும் பயணமாகி அதுனூடே திரைப்படத்தை ஒரு கலையாக கருதி தன்னை ஒரு ஓவியனாக, கலைஞனாக, எடிட்டராக, தயாரிப்பாளராக மற்றும் இயக்குநராக வடிவமைத்து கொண்டு அந்த கலை வடிவத்தை அன்பாக, நேசமாக, காதலாக யதார்த்தின் ஒரு பதிவாக அவற்றை வெளிப்படுத்துவதால் அப்பாஸ் கிராஸ்தமி ஒரு அற்புத கலைஞன் என்று சொல்வதில் மிகுந்த ஆனந்தமே...

நன்றி : வண்ணத்துப் பூச்சியார்

No comments:

Post a Comment