இப்போது இருக்கிற நான்கு வாரியங்களையும் கலைத்துவிட்டு, ஒரே வாரியம் அமைத்து, ஒரே பாடத் திட்டம் கொண்டுவந்து, ஒரே தேர்வைக் கொண்டுவந்துவிட்டால், அதுதான் சமச்சீர்க் கல்வி என்று பலரும் நினைக்கிறார்கள். படித்த பெருமக்களும் அவ்வாறே நினைக்கின்றனர். அது அல்ல. அடிப்படையான, ஜீவனான ஒன்று என்னவென்றால், பயிற்றுமொழி தாய்மொழி வழியாக இருக்கவேண்டும். ஆங்கில மொழியில் கற்றவர்கள் உயர்ந்தவர்கள், தமிழ் பயின்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலை இருக்கிறது. வேலைவாய்ப்புகள் வரை ஆங்கிலக் கல்வி பயின்றவருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டுமானால், தமிழ்நாட்டில் தமிழே பயிற்றுமொழியாக்கப்படவேண்டும். இது சமச் சீர்க் கல்வியினுடைய ஆதாரவேர்.ஆங்கில வழியில் படித்து வந்தவர்கள் உடனடியாக மாற முடியுமா என்று கேள்விகள் எழுகின்றன. ஆரம்பக் கல்வியை தமிழிலே படித்தவர்கள் மேற்படிப்பை ஆங்கிலத்தில் தொடருகிறார்கள். இது முடியுமானால், ஆங்கிலக் கல்வி பயின்றவர்கள் தமிழ் வழிக் கல்விக்கு மாறுவதற்கு எத்தனைக் காலம்வேண்டும்?
ஒரே நாளில் எல்லா வகுப்புகளுக்கும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்கிவிட முடியும். அதற்குத் தேவை அரசியல் உறுதி. நடுத்தர, படித்த மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது எடுக்கப்படவேண்டிய முடிவு அது.
அடுத்தது அருகமைப் பள்ளி முறை. கோத்தாரி குழு அறிக்கை இதை வலியுறுத்தி இருக்கிறது. இங்கு பொதுப் பள்ளி முறையும், அருகமைப் பள்ளி முறையும் இருந்தன.நாமெல்லாம் வீட்டுக்குப் பக்கத்திலே இருந்த பள்ளியில்தான் படித்தோம். அதுப் பொதுப் பள்ளிதான். எம் எல் ஏ மகனும் அங்குதான் படிப்பான். அமைச்சர் பிள்ளையும் அங்குதான் படிக்கும். சாதாரணத் தொழிலாளியின் பிள்ளையும் அங்குதான் படிக்கும். அந்த நிலை ஏன் மாறியது? புதிதாக வந்த ஆங்கில வழி, கட்டண வழிக் கல்விதான் இதற்குக் காரணம்.
இன்று கல்வியின் பலன்கள் மிகச் சிறுபான்மையினரைப் போய் சேருகின்றன. அவர்கள்தான் உயர் கல்வியைப் பயில முடிகிறது. அவர்களுக்கு நாடு முக்கியமல்ல. தமது சுயநலம்தான் பெரிது என்று எண்ணுபவர்கள் அவர்கள்.படித்து முடித்து அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பறந்து செல்கிறார்கள். நாட்டைத் துறக்கின்றார்கள். மறக்கின்றார்கள்.
ஆனால் சமச்சீர்க் கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் நாட்டையும் மக்களையும்பற்றி சிந்திப்பார்கள். நமது நாட்டில் வாழ்வார்கள். நம் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள். அவர்களுக்காகத்தான் நமது கல்விக்கூடங்கள் இருக்கவேண்டுமேயொழிய, படித்த இளைஞர்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களாக கல்விக்கூடங்கள் மாறிவிடக் கூடாது.
கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்
No comments:
Post a Comment