Monday, July 20, 2009

தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஹிலாரி கிளிண்டன்

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அமெரிக்க மந்திரி ஹிலாரி கிளிண்டன் வற்புறுத்தினார்.

5 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் குர்கானில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

தீவிரவாதம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுத்திருப்பவர்களுக்கும் கூட மிகவும் ஆபத்தானதுதான். எனவே அனைத்து நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக நின்று அதைத் தோற்கடிக்கவேண்டும்.

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. இதற்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன்பாக கொண்டு வரப்பட்டு தண்டனை அடையும் நாள் வந்தே தீரும்.

தீவிரவாதத்தின் கூட்டுறவு மையமாக பாகிஸ்தான் திகழ்ந்து வருகிறது. அங்கு அல்-கொய்தா, தலீபான், மற்றும் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடைஞ்சலைத் தருகின்றன.

தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதன் அவசியம் குறித்து நான் பாகிஸ்தான் மக்களை நேரடியாகவே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பாகிஸ்தான் நலனுக்காகவும், நாட்டின் எதிர்கால ஸ்திரத்தன்மைக்காகவும், பாதுகாப்பிற்காகவும், தீவிரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் மக்களை வலியுறுத்தி இருக்கிறேன்.

தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும் இல்லையென்றால் அது தங்கள் நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்ற எண்ணம் பாகிஸ்தான் அரசிடம் மட்டுமின்றி அந்நாட்டு மக்களிடமும் உருவாகி இருக்கிறது. கடந்த 6 மாதங்களில், இந்த எண்ணம் பாகிஸ்தான் அரசின் அனைத்து துறைகளிலும் பரவியுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையாக போராடவேண்டும் என்று அரசு, ராணுவம், பொதுமக்கள், புலனாய்வுத் துறை என்று பாகிஸ்தானின் அனைத்து தரப்பினரிடமும் அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

தீவிரவாதத்தின் கூட்டுறவு மையமாக பாகிஸ்தானை மாற்றிவிடாமல் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அல்-கொய்தா, தலீபான் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் ஒருங்கிணைந்துள்ளன.

அவை அமெரிக்காவுக்கு மிகுந்த தொந்தரவைக் கொடுத்து வருகின்றன. இதேபோல்தான் இந்தியாவுக்கும் இடைஞ்சல் அளிக்கின்றன. இப்போது பாகிஸ்தானுக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருகின்றன.

எங்கு தீவிரவாதம் இருந்தாலும், அங்கே மக்கள் யாரும் நிம்மதியாக வாழ முடியாது. இது ஒரு நாட்டோடு முடிந்து விடும் பிரச்சினையும் அல்ல. எனவே ஒவ்வொரு நாடும் தீவிரவாதத்துக்கு எதிராக போராட வேண்டும். தீவிரவாதிகளை எதிர்த்து போராட விட்டால் நமக்கு நாமே சிக்கலை உருவாக்கிக் கொள்வது போன்றதாகும்.

தீவிரவாதிகள் உலகம் முழுவதும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். அண்மையில் ஜகார்த்தா மக்களுக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்ததைக் கண்டோம்.

குறிப்பாக ஜனநாயக நாடுகளான அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளை தீவிரவாதிகள் குறி வைத்து தாக்குகிறார்கள்.

ஏனெனில் இந்த நாடுகளில் எல்லாம் மக்கள் சுதந்திரமாகவும், இறையாண்மையுடனும் வாழ்வது அவர்களுக்கு பொறுக்கவில்லை.

எனவே எல்லா நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை நாங்கள் உற்று கவனித்து வருகிறோம். இது நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுடன், தகவல் பரிமாற்றம், மக்களை பாதுகாக்க ஆக்கப் பூர்வமான வழிகளை கண்டறிவது ஆகியவற்றில் அமெரிக்க அதிக அளவில் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறது.

தீவிரவாதியாக இருப்பதும், குண்டுகளை வைப்பதும் ரொம்ப சுலபமானது. ஆனாலும் அதை முறியடித்து விடுவோம் என்ற நம்பிக்கை நிறைய இருக்கிறது.

இந்தியாவின் வேளாண் உற்பத்திக்கும், வறுமையை விரட்டுவதற்கும் அமெரிக்கா உதவி செய்யும். இதற்காக தரமான விதைகளை இந்தியாவிற்கு அளித்து விவசாய உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா உதவி செய்யும்.

மேலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பிற்காக 5 தூண்கள் என்ற திட்டம் விரைவில் அறிவிக்கப்படும். இதில் விவசாயம் வலிமையான ஒன்றாக இருக்கும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கட்டுப்படுத்தும் எந்த செயலையும் அமெரிக்கா செய்யாது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment