Wednesday, July 8, 2009

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவல் குறைந்துள்ளது

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவது அண்மைக் காலங்களில் குறைந்து உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தவண்ணமே உள்ளன. இதனால் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பையும் கண்காணிப்பையும் குறைக்க முடியாது என்று இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் .கே.அந்தோணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய பாகிஸ்தான் நல்லுறவுக்கான பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்துக்கு மேம்பட்டுச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆனால் அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்குவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் பேச்சுவார்த்தைகளால் ஒரு பயனும் விளையப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தானில் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் இந்தியாவிற்கு மிகவும் கவலை அளிப்பதாகவும் அந்தோணி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், அருணாச்சலப் பிரதேசப் பகுதியில் இரு போர்ப்படைப் பிரிவுகளை இந்தியா நிறுவப் போவதாகவும் தெரிவித்தார். இந்தியா எந்த நாட்டுக்கும் எதிராக செயல்படப் போவதில்லை; அண்டை நாடுகளுடன் நட்புறவுகளை நிலை நிறுத்திக் கொள்ளவே விரும்புகிறது என்று கூறிய அமைச்சர், எனினும் இந்தியப் போர்ப்படையின் வலுவை உறுதி செய்து கொள்வதும் மிக முக்கியமானது என்று சுட்டிக் காட்டினார்.
மத்திய அரசின் இந்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் ராணுவத்துக்காக ஒரு லட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment