அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (Non-Proliferation Treaty - NPT) கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே அணு எரிபொருளை (யுரேனியத்தை) செரிவூட்டும் (Enrichment) மற்றும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி (Reprocessing) செய்யும் தொழில்நுட்பங்களை விற்க வேண்டும் என்று ஜி 8 மாநாட்டில் செய்யப்பட்ட பிரகடனம் இந்தியாவிற்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.ஏனெனில் இந்தியா அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு என்பதால், ஜி 8 நாடுகளின் இந்தப் பிரகடனம், அணு சக்தி தொழில்நுட்ப வாணிகக் குழுவில் (Nuclear Suppliers Group - NSG) சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய விதியாகும். என்பிடி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு மட்டுமே அணுத் தொழில்நுட்பத்தை அளிக்கும் இக்குழுவின் உறுப்பு (45) நாடுகள், கடந்த ஆண்டில் இந்தியாவிற்கு அந்த நிபந்தனையில் இருந்து முழு விலக்கை (Clean Waiver) அளித்தன. இதனையடுத்தே இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான 123 ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.“சமூக அடிப்படையிலான முழுமையான ஒத்துழைப்பிற்கு” இந்தியா தகுதிபெற்ற நிலையில்தான் நமது நாட்டின் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பெறுவதற்கும், நமது அணு மின் உற்பத்தியை பெருக்கிக்கொள்ள பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அணு உலைகளை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் துவங்கின. பிரான்ஸின் ஆரிவா நிறுவனத்திடமிருந்து 1600 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை பெற்று அதனை மராட்டியத்தில் நிறுவவும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், ஜி 8 நாடுகளின் இந்த “தடை”ப் பிரகடனம் விடுக்கப்பட்டுள்ளது.இது நம்மை எந்த விதத்திலும் பாதிக்காது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான போது (முந்தைய ஆட்சியில்) இவர் அயலுறவு அமைச்சராக இருந்ததால் ஜி 8 பிரகடனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரணாப் முகர்ஜி அளித்த பதில் இதுதான்: “சமூகத் தேவைகளுக்கான அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பானவை பன்னாட்டு அணு சக்தி முகமையும் (International Atomic Energy Agency), அணு சக்தி வாணிகக் குழுவும்தான் (Nuclear Suppliers Group - NSG). இதில் அணு சக்தி வாணிகக் குழுவிடமிருந்து நாம் முழுமையான விலக்கு பெற்றுள்ளோம். எனவே ஜி 8 நாடுகளின் பிரகடனம் குறித்து கவலைப்படத் தேவையில்லை”.ஆனால் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், “இந்தப் பிரகடனம் கவலைக்குரியதே” என்று கூறியுள்ளார்.அனில் ககோட்கர் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், மற்ற நாடுகளிடமிருந்து நாம் இறக்குமதி செய்து நமது அணு உலைகளில் பயன்படுத்தும் யுரேனியம் எரிபொருளை, அதன் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சி செய்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் புளுடோனியம் என்று அணு எரிபொருளை குறைந்த அளவிலான யுரேனியத்தையும் சேர்த்து நமது ஈனுலைகளில் (Fast Breeder Reactor) பயன்படுத்தலாம். இதன் மூலம் அணு எரிபொருள் முழுமையாக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, அணுக் கழிவினால் (Nuclear Waste) ஏற்படும் ஆபத்தை தவிர்க்கவும் முடியும். இதனையே எரிபொருள் சுழற்சி (Fuel Cycle) என்று அணு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment