டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரும் உடன் இருந்தார்.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துதல், பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, தீவிரவாத ஒழிப்பு, பூமி வெப்பமயமாவது, கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தை முடிந்ததும், ஹிலாரி கிளிண்டனுக்கு மன்மோகன்சிங் மதிய விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி எம்.பி., தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, தீவிரவாதத்தால் ஏற்படும் அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பு சோனியா காந்தியின் இல்லத்தில் நடந்தது. அங்கு வந்த ஹிலாரி கிளிண்டனை சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் மத்திய மந்திரி கரண்சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.ஹிலாரியின் வருகை இந்தியா-அமெரிக்கா உறவில் மிகவும் சாதகமான சூழலை உருவாக்கும் என்று சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.
வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவையும் ஹிலாரி சந்தித்து பேச்சு நடத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் ஹிலாரி கிளிண்டன் சந்தித்து 45 நிமிடம் பேசினார்.
அப்போது, எகிப்து நாட்டில் உள்ள சார்ம்-எல்-சேக் நகரில் சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கும் இடையே நடந்த சந்திப்பை தொடர்ந்து இருநாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை பற்றி அவர்கள் முக்கியமாக ஆலோசித்ததாக, பின்னர் பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் தெரிவித்தார். பாகிஸ்தான் விஷயத்தில் இந்தியாவில் தேசிய அளவில் ஒருமித்த கருத்து நிலவுவதாகவும், ஆனால் இந்த கூட்டறிக்கை அதை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையில் இருப்பதாக ஹிலாரியிடம் அத்வானி கூறியதாகவும் தெரிவித்தார்.அமெரிக்காவுடன் நல்லுறவு வைத்துக்கொள்ள இந்தியா விரும்புவதாகவும், ஆனால் தேசிய கருத்தொற்றுமைக்கு எதிராக இந்தியாவை வற்புறுத்த முடியாது என்று அத்வானி கூறியதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
டெல்லி பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தீவிரவாதம் உலக நாடுகளுக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது. எனவே தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். தீவிரவாதத்தை ஒழிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உறுதியாக இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது போன்ற ஒரு சம்பவம் இனி உலகில் வேறு எங்கும் நடக்கக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அழிப்பது எளிது. ஆனால் உருவாக்குவதுதான் மிகவும் சிரமம். நமக்கு உருவாக்குபவர்கள்தான் தேவை. அளிப்பவர்கள் தேவை இல்லை.
தீவிரவாதத்துக்கு எதிரான போர் குறித்து இந்தியா தெரிவித்துள்ள கருத்துகளை ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் தீவிரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானும் உண்மையிலேயே போராடி வருகிறது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எகிப்தில் உள்ள சார்ம்-எல்-சேக் நகரில் கடந்த 16-ந் தேதி இந்தியாவும், பாகிஸ்தானும் வெளியிட்ட கூட்டறிக்கையை வரவேற்கிறேன்.
பருவநிலை மாற்றம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருக்கிறது. இந்த பிரச்சினையில் இருநாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்த போதிலும் பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வு காண வேண்டும்
இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் கூறினார்.
No comments:
Post a Comment