இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் (ISCUF) தமிழ் மாநில மாநாடு 12.07.2009 அன்று மதுரை அரசடி இறையியல் கல்லூரியில் N.T.வானமாமலை அரங்கில் நடைபெற்றது. காலை 9.00 மணிக்கு மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது.
ஜானகி கிருஷ்ணன், சாந்தி வெங்கடேசன், ரஜுலா ஜெகநாதராஜா, ஷியாமளா ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். உ.கருணாகரன் தலைமையில் K.முத்தியாலு அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மைகேல் ஜாக்சன், விமலா டாங், உஸ்தாத் அலிகான் மற்றும் இலங்கையில் உயிர் நீத்த அப்பாவித் தமிழர்கள் ஆகியோர் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டிற்கு வருகை தந்தோரை மதுரை மாவட்ட தலைவர் K.ராமையா வரவேற்றார்.
மாநாட்டில் அடுத்த நிகழ்வாக, இஸ்கஃப் இயக்க முன்னோடிகளின் படத்திறப்பு விழா நடைபெற்றது. N.T.வானமாமலை உருவ படத்தை நீதியரசர் K.N.பாஷா, Dr.கிருஷ்ணன் உருவ படத்தை Dr.K.A.ஸ்ரீநிவாசன், அலெக் உருவ படத்தை N.R.சுப்ரமணிராஜா, சேலம் தாமோதரன் உருவ படத்தை பாலம் கல்யாண சுந்தரம் ஐயா மற்றும் S.ஜெகன் உருவ படத்தை கு.சாமிதுரை ஆகியோர் திறந்து வைத்தனர்.
அதையடுத்து அமரர் N.T.வானமாமலை நினைவு சொற்பொழிவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி K.N.பாஷா ஆற்றினார். தோழர். வானமாமலையின் உருவ படத்தை திறந்து வைக்க தான் வாய்ப்பு பெற்றது பெரும் பேறு என்று குறிப்பிட்டார்.
இஸ்கஃப் மாநாடு தனது குடும்ப விழா என்று குறிப்பிட்ட நீதியரசர் தொடர்ந்து இஸ்கஃபின் தேவைகளில் தனது பங்களிப்பை வழங்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.
அவரது உரையை அடுத்து, 'இஸ்கஃப் குரல்' மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் உ.கருணாகரன், பாலம் கல்யாணசுந்தரம் ஐயா முன்னிலையில் நீதியரசர் K.N.பாஷா வெளியிட தா.பாண்டியன் பெற்றுக் கொண்டார். இஸ்கஃபின் அகில இந்திய பொது செயலாளர் கன்ஷியாம் பட்நாயக் மாநாட்டில் பங்கேற்று தனது வாழ்த்துரையை வழங்கினார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர். ஸ்டாலின் குணசேகரன், மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் N.நன்மாறன், P.சேதுராமன் ஆகியோர் தொடர்ந்து வாழ்த்துரை வழங்கினர். அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர். தா. பாண்டியன் தனது வாழ்த்துரையை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய தா.பாண்டியன், இந்திய கலாச்சாரத்தைப் பேணிக்காப்பதில் இஸ்கஃப் முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இஸ்கஃப் அமைப்பின் புரவலர் பாலம் கல்யாணசுந்தரம் ஐயா அவர்கள் அரசு ஊழியர்களுக்கான 6வது ஊதியக் கமிஷன் நிலுவைத் தொகையை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கான நன்கொடையாக வழங்கி உலக சாதனை படைத்ததையும், அரசு ஊழியர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளையும் L.அசோக் குமார் மாநாட்டுப் பங்கேற்பாளர்கள் இடையே விவரித்துக் கூறினார்.
மதிய உணவுக்கு பிறகு பிரதிநிதிகள் மாநாடு, துணைப் பொது செயலாளர் ஜானகி கிருஷ்ணன் உரையுடன் தொடங்கியது. துணைப் பொது செயலாளர் L.அசோக் குமார் வரவேற்புரையாற்றினார். மாநில பொருளாளர். S. கோட்டியப்பன் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். மாநில செயலாளர் S.ராதாகிருஷ்ணன் பொது செயலாளர் அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார்.
புதிய மாநிலத் தலைவராக 'இளம்பாரி' உ.கருணாகரன், புதிய மாநில பொதுச் செயலாளராக S.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பலத்த கரகோஷத்துடனும் ஆரவாரத்துடனும் தேர்வு செய்யப்பட்டனர். மாநில நிர்வாகிகள், மாநில குழு உறுப்பினர்கள் தேர்வும் நடைபெற்றது.
புதிய தலைவர் கருணாகரன் நகைச்சுவை ததும்பிய, இனிமையான உரையின் மூலம் ஏற்புரை வழங்கினார்.
மாநாட்டை மிகச் சிறப்புடன் வழிநடத்திய மாநில செயலாளர் வெ.சுப்ரமணியன் தீர்மானங்களை முன் மொழிந்தார். இலங்கையில் வாழ்வுரிமைக்கு போராடும் தமிழர்களின் நலன் வேண்டியும், கச்சத்தீவினை இந்திய அரசின் ஆளுமைக்குள் கொண்டுவர வேண்டுமென்றும், வியாபார மயமாக்கப்பட்டுள்ள கல்வி கொள்கையை மாற்றி அனைவருக்கும், கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டுமென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பா.காளிதாஸ் நன்றி கூற மாநாடு மிக சிறப்புடன் நடந்தேறியது.
No comments:
Post a Comment